சந்திரிகா, கதிர்காமர் காலத்தில் நடந்ததே செம்மணிப் படுகொலை; முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு

1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்திலேயே செம்மணிப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். செம்மணியில் இடம்பெற்று வருகின்ற நீதியின் ஓலம்-02 போராட்ட களத்துக்கு வருகை தந்து, அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
செம்மணிப் படுகொலை இடம்பெற்ற காலத்தில் துணை ஆட்சியாளர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈபிடிபி இருந்ததுடன் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் இருந்தார். அந்த ஆட்சிக் காலத்தில்தான் யாழ் மண்ணில் எம் உறவுகள் குடும்பம் குடும்பமாக பெரியோர்கள் முதல் சிறியவர்கள் என்று எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி கொல்லப்பட்டு இந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.அதன் வெளிப்பாடே இன்று நூற்றுக்கணக்கான உடலங்கள் மீட்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
தமிழினப் படுகொலைக்கு சாட்சியங்கள் இல்லை என பலர் கருதினாலும் கூட, செம்மணிப் படுகொலை ஒரு சாட்சியமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இதன் மூலமாக சர்வதேச நீதி கோர இதனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
1954ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றிருந்தாலும் கூட, பல்வேறு படுகொலைகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றிருக்கின்றன. செம்மணிப் படுகொலை அதற்கான ஒரு அடித்தளமாகக் காணப்படுகின்றது.
நாம் எமது இனப்படுகொலைக்கு எதிராக 17 வருடங்களாகக் குரல் கொடுத்து வருகின்றோம். மக்கள் சக்தி ஒன்றேதான் சர்வதேச ஆணையைக் கொண்டு வரும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
![]()