நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு வேண்டியவர்களை நியமிக்க அரசாங்கம் சதி; மனோ குற்றச்சாட்டு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் போர்வையில் அரசாங்கம் தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கே சதித் திட்டம் தீட்டுகின்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.Translation Tools & Resources
கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் திருத்தம் தொடர்பான எமது நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். அதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் சிலருக்கு இது சரியாகப் புரியவில்லையா அல்லது புரிந்துகொள்ளும் வகையில் அவர்களின் சிந்தை சரியாக இல்லையா என்பது தெரியவில்லை.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இங்கு வயது ஒரு பிரச்சினையல்ல. திறமை இருக்குமானால் அதனைச் செய்வதில் தவறும் இல்லை. சில நாடுகளில் இவ்வாறான நடைமுறைகள் காணப்படுகின்றன. ஆனால் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது மனோ கணேசன் வயதை அதிகரிப்பதற்கு உடன்பட்டார் என்று மட்டும் செய்தி வெளியிட வேண்டாம்.Travel Guides & Travelogues
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே அனுபவமிக்க நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் உண்மையிலேயே அரசாங்கத்துக்கு அந்த அக்கறை இருக்குமானால், கடந்த காலங்களில் வெற்றிடமாக இருந்த நீதிபதி பதவிகளை ஏன் உடனடியாக நிரப்பவில்லை என்ற கேள்வி எழுகிறது.
கடந்த காலங்களில் அனுபவமிக்க பல நீதிபதிகள் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர். பிரியந்த பெர்னாண்டோ 33 ஆண்டுகளும், இளஞ்செழியன் 40 ஆண்டுகளும் அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் துரைராஜா 10 ஆண்டுகளும், குமுதினி விக்கிரமசிங்க 16 ஆண்டுகளும் அனுபவம் பெற்றவர்கள். இவ்வாறான அனுபவமிக்க நீதிபதிகள் இருக்கும் போது அவர்களை ஓய்வுபெற விட்டுவிட்டு, வெளியில் இருந்து தமக்கு வேண்டியவர்களை கொண்டுவருவதற்கே அரசாங்கம் சதித் திட்டம் தீட்டுகிறது.
அனுபவமற்ற மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லாத அப்பாவி மக்களுக்கு அரசாங்கம் நல்ல காரியம் செய்வது போலக் காட்டி, தமக்குத் தேவையானவர்களை பதவிகளில் அமர்த்துவதற்கே இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது. 70 வயதோ அல்லது 80 வயதோ வயதை அதிகரிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த சூழ்ச்சியையே நாம் எதிர்க்கின்றோம்.
பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் எதிர்க்கட்சியில் ஒன்றாகப் பயணித்தவன் என்ற ரீதியில் எனது சகோதரர் அநுர குமார திசாநாயக்கவிடம் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என்றே கூறுகின்றேன். தாம் பெரிய ஆபத்தை எதிர்கொண்டு இந்த வேலையில் இறங்கியுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் அவரை யாராவது பதவியை விட்டுப் போகுமாறு கூறினார்களா? அவருக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது.
அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு பொய்யான கதையை உருவாக்க அரசாங்கம் முயல்கிறது. மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சதித் திட்டங்கள் மூலமாகவோ அல்லது ஆயுதங்களை ஏந்தியோ கவிழ்க்கும் முகாமில் நாம் ஒருபோதும் இருந்ததில்லை. 1964 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கு எதிராகவும், 1989 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்துக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் விடுதலை முன்னணியினரே தவிர நாம் அல்ல. நாம் தேர்தல்கள் மூலமாகவே அரசாங்கத்தை மாற்றுவோம். இன்னும் மூன்று ஆண்டுகள் அவகாசம் உள்ளது, எனவே ஜனாதிபதி பதவியில் தொடரட்டும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் அதனைச் சதி என்கிறார்கள், திருடர்கள் என்கிறார்கள். நான் ஒருபோதும் திருடியதில்லை, என் மீது எந்தக் கோப்புகளும் இல்லை. அதனால் தான் தைரியமாகப் பேசுகின்றேன். அரசாங்கத்துக்கு பயம் இல்லை என்றால், தமது இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆணை உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மக்கள் தீர்ப்புக்குச் செல்லட்டும். அப்போது மக்கள் அதற்குரிய பதிலை வழங்குவார்கள். ஆனால் அரசாங்கம் அதற்கு ஒருபோதும் செல்லாது என்றார்.
![]()