அலையாகப் பரவும் சிறை மோதல்கள்; பின்னால் பெரும் சதி

சிறைச்சாலை கட்டமைப்பை சிதைக்க திட்டமிட்ட சதி இடம்பெறுகின்றது.எனவே சிறைச்சாலை கட்டமைப்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறான சிறைச்சாலை மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து மஹர, வெலிக் கடை மெகசின் , குருவிட்ட மற்றும் பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளிலும் மோதல்,பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல் தற்போது கட்டம் கட்டமாக வளர்ச்சி பெற்று வருகின்றது
எமக்கு கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளுக்கு அமைய இவை திட்டமிட்டதொரு செயற்பாடு என்பதுடன், சிறைச்சாலை கட்டமைப்பை சிதைக்கும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.
வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையில் 40 பேர் ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.இந்த நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன .இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன் தொடராக குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக வெளியில் செல்ல அனுமதியளித்த போது அவர்கள் கட்டிடம் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர் . சிறைச்சாலைகளில் ஏற்படும் இவ்வாறான மோதல்களை,பதற்ற நிலைமைகளை கட்டுப்படுத்தும் போது கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கட்டமைப்பை சிதைக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட சதியில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகிறது. எனவே சிறைச்சாலை கட்டமைப்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறான சிறைச்சாலை மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றார்.
![]()