வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் அனைத்தையும் ஏன் விடுவிக்கவில்லை?; கேள்வி எழுப்பினாராம் ஜனாதிபதி

வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையிலே தான் இன்னமும் இருப்பதாகவும், ஏன் இந்த காணிகளை விடுவிக்க முடியாமல் இருக்கிறது என்பதற்காக அறிக்கையொன்றை இராணுவத்தினரிடம் கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் பேசுகின்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் பேசுகின்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
நாங்கள் மூன்று விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியோடு பேசினோம். தமிழ் பேசுகின்ற மக்களுடைய அரசியல் கூட்டணி ஏன் உருவாக்கப்பட்டது? இதனுடைய நோக்கம் என்ன? பொதுவாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் பற்றி பேச வேண்டும் என்று சொன்னோம்.
இது ஒரு நல்ல விசயம் ஒன்று சொன்னார். அதேவேளையிலே, நாட்டிலே ஒரு இனவாத கருத்தியல் நிலவாத வண்ணமாக, பொதுவான நாட்டுப் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் நாங்கள் ஈடுபட வேண்டும் என்ற ஒரு கருத்தை அவர் சொன்னார். நாங்களும் அவரிடத்திலே ‘அப்படியான விஷயங்களிலே நாங்கள் ஈடுபடுவோம்’ என்று சொன்னோம்.
நாட்டிலிருக்கிற பிரச்சனைகளுக்கு அமைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக சொல்லியிருந்தார். அது இன்னமும் இரண்டு வருடங்களாகியும் மீண்டும் முதல் படிகூட எடுத்து வைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய போது, “இல்லை, அதை செய்வோம். கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நிச்சயமாக ஒழிப்பேன். அது வெகு விரைவிலே நடைமுறைக்கு ஆரம்பமாகும்” என்று சொன்னார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் உடனடியாக வைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருந்தோம். அதற்கு, ஒரு தெரிவுக்குழு பாராளுமன்றத்திலே நியமிக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய அறிக்கை வந்தவுடனே அதைச் செய்வோம் என்று சொன்னார். அதற்குத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்ற இரண்டு பேர், சாணக்கியன் இராசமாணிக்கமும் நிஸாம் காரியப்பரும் சொன்னார்கள்: அந்தத் தெரிவுக்குழுவிலே எந்த முடிவும் வராது. அது நேரம் விரயமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பதை தெளிவாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு அவர் சொன்னார், அந்தத் தெரிவுக்குழுத் தலைவரோடு தான் இன்றைக்கு பேசிவிட்டு, அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி எங்களுக்கு அறியத்தருவதாக சொன்னார்.
அத்துடன் நிலப் பிரச்சனை, காணிப் பிரச்சனை சம்பந்தமாக நீண்ட நேரம் பேசினோம். அனைத்து காணிகளும் மக்களுடைய தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்டவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையிலே தான் இன்னமும் இருப்பதாகச் சொன்னார். இராணுவத்தினரிடத்திலே ஒரு அறிக்கையைக் கேட்டிருக்கிறாராம். ஏன் இந்த காணிகளை விடுவிக்க முடியாமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தைச் சொல்லும்படியாக ஒரு அறிக்கையைக் கேட்டிருப்பதாகச் சொன்னார். ஆகவே அது நிச்சயமாக நடக்கும் என்று சொன்னார்.
மலையகத்தைப் பொறுத்தவரையிலே, அந்த மக்களுக்குக் காணியே கிடையாது. அதுபற்றிப் பேசுகின்ற போது, அதற்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அது அந்தந்த கம்பனிகளிடத்திலே அந்த காணிகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலே, அவர்களோடு பேசித்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
![]()