இலங்கை

யோஷிதா மற்றும் கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2006 செப்டம்பர் 01 ஆம் திகதிக்கும் 2007 ஜூன் 08 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாக பணியாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதி உரிய கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த நிலையிலும், பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் ‘Royal Navy Young Officers Course’ பாடநெறியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 62 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் செயலின் மூலம் சட்டவிரோத லாபத்தைப் பெற்றுக்கொண்டார் எனக் குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ஷவிற்கும் இவ்வாறு குற்றப்பத்திரிகை கையளிக்கடைந்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முறைப்பாட்டாளரின் 25 சாட்சிகளும், 47 சான்றாதார ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச ஆணைக்குழுவினால் இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக 8 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வழக்கு எதிர்வரும் நாட்களில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2006 ஒக்டோபர் 06 ஆம் திகதி அரச கடற்படை பயிற்சிப் பாடநெறிக்கு விண்ணப்பித்த போது, சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ ஒரு சிவிலியனாகவே இருந்தார் என்பதுடன், அவருக்காக கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவின் பாடநெறிக்கான ஆட்சேர்ப்புத் தகுதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதுவரை கடற்படை நிறைவேற்றுப் பிரிவின் பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு க.பொ.த உயர்தரத்தில் கணிதம் அல்லது விஞ்ஞான பாடத்துறைகளில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், கலைத்துறையில் உயர்தரம் கற்றிருந்த சந்தேகநபருக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்காக உரிய விதிமுறைகள் மாற்றப்பட்டு, அனைத்துப் பாடத்துறைகளிலும் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய வகையில் நடைமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

இது தவிர, பிரித்தானியாவின் அரச கடற்படையின் கடற்படை மாணவர்களுக்கான (Cadets) சிறப்புப் பாடநெறிக்கு, இலங்கை கடற்படையில் இரண்டு வருட பயிற்சிகளின் பின்னர் காண்பிக்கும் திறமைகளின் அடிப்படையில் மட்டுமே தெரிவு செய்யப்படுவர் என்ற போதிலும், சந்தேகநபருக்கு எவ்வித முறையான தெரிவுசெயல்முறையுமின்றி அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னரே, அதாவது 2006 டிசம்பர் 06 ஆம் திகதி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதுடன், அவர் டிசம்பர் 14 அல்லது 15 ஆம் திகதியிலேயே படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் திருகோணமலையில் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட குழுவினரில் சந்தேகநபர் மட்டும் பிரத்தியேகமாக டிசம்பர் 29 ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அதற்கமைய இணைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கூட நிறைவடைவதற்கு முன்னர், அதாவது 2007 ஜனவரி 01 ஆம் திகதி அவர் இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

1995 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் குறித்த அரச கடற்படை பயிற்சிப் பாடநெறிக்காக இலங்கையிலிருந்து ஐந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதுடன், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறித்த வெளிநாட்டு அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட இலவச புலமைப்பரிசில்களின் கீழ் அப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷவிற்காக மட்டும் இலங்கை அரசாங்கத்தினால் 62,842,188.61 ரூபாய் தொகை செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரியளவில் பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்தலாகும் என்றும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button