இலங்கை

கட்டிடங்கள் தீக்கிரை-ஆவணங்கள்,சொத்துக்கள் அழிப்பு; மகர சிறைச்சாலைக்கு மிகப் பெரும் அழிவு;  உறவினர்கள் படையெடுப்பு; ஒரு கைதி பலி,6 கைதிகள் காயம்

மகர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கைதிகள் வன்முறைகளில் ஈடுபட்டதால் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான நிலைமை 12 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் நிலைமையால் கைதியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதிகளின் செயற்பாடுகளால் சிறைச்சாலையின் பெரும்பாலான கட்டிடங்கள் தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த சொத்துக்களுக்கும் பெருமளவில் சேதமேற்பட்டுள்ளன.

கைதிகளைப் பார்ப்பதற்காக அவர்களின் உறவினர்கள் வந்திருந்த வேளையில், மற்றொரு கைதிகள் குழுவினர் சிறைச்சாலையிலிருந்து வெளிநோக்கி கற்களை வீசியதைத் தொடர்ந்தே அங்கு மோதல் நிலைமை உருவாகியுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக மதிலை உடைத்துக்கொண்டு சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவிலேயே இந்த சம்பவம் ஆரம்பமாகியுள்ளது. அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்த போது பதற்ற நிலையை ஏற்படுத்திய கைதிகள், தமக்கு ஒத்துழைப்பு வழங்காத ஏனைய கைதிகள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடங்களுக்குத்

தீ வைத்த கைதிகள்

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகே இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளதுடன், சிறைச்சாலைக்குள் காயமடைந்திருந்த சிலரை மீட்டு சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர்களிடையே பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த 33 வயதுடைய கைதியொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் வத்தளை, ஹேந்தலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதடன். மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியமை மற்றும் 20 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும், கைதிகள் ஆக்ரோசமாக நடந்துகொண்டு அங்கிருந்த சிறைச்சாலை வைத்தியசாலை, சமையலறை, சிறைக்காவலர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளதுடன், அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

இராணுவம், விசேட

அதிரடிப் படை வரவழைப்பு

இவ்வேளையில் நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலைக்கு விசேட அதிரடிப்பயைினர் வரவழைக்கப்பட்டதுடன், உதவிக்கு இராணுவத்தினரும் அனுப்பப்பட்டிருந்தனர். இதன்போது இராணுவத் தளபதியும் அவ்விடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் கைதிகள் எவரும் தப்பிச் செல்லாத வகையில் சிறைச்சாலைக்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சிறைச்சாலைக்கு முன்னால்

திரண்ட உறவினர்கள்

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து தகவல் அறிந்த கைதிகளின் உறவினர்கள், இரவு சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டனர். இதன்போது சிறைக்குள் இருக்கும் தமது உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோசமெழுப்பி, பாதுகாப்புக்கு நின்ற பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அங்கு பொலிஸார், கலகம் அடக்கும் பிரிவினர், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வீதித் தடைகளை போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

எப்படியிருப்பினும், சிறைச்சாலை வளாகத்தினுள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் போன்ற சத்தம் கேட்பதாக கூறி ஆத்திரமடைந்த கைதிகளின் உறவினர்கள், வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றனர். எனினும், அந்த முயற்சியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முறியடித்ததுடன், பின்னர் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு

இந்த நிலைமையில், பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்து கைதிகளின் உறவினர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தியதை அடுத்து, அவர்களை சிறைச்சாலைக்கு முன்னால் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்திலும் அங்கு ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது பிரதேசத்தின் அமைதியைப் பேணும் நோக்கில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகர சிறைச்சாலையை சுற்றியுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு சனிக்கிழமை இரவு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி, 246 கெந்தலியத்தபாலு மேற்கு, 246 சீ கெந்தலியத்தபாலு வடக்கு மற்றும் 181 ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்தும் உறவினர் நின்றிருந்தனர்.

இரவு முழுவதும் நீடித்த பதற்றம்

பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டிருந்த போதும், இரவு முழுவதும் சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை தொடர்ந்தது. இரவிலும் கைதிகளால் கட்டிடங்கள் சிலவற்றுக்கு தீ வைக்கப்பட்டிருந்ததுடன், உள்ளிருந்து வெடிச் சத்தங்களும் கேட்டன.

இவ்வேளையில், வான்வழியில் சிறைச்சாலையின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக ட்ரோன் விமானம் மற்றும் பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஆகியவற்றை விமானப்படை பயன்படுத்தியது.

12 மணி நேரத்தின் பின்னர்

பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டுக்குள்

சிறைச்சாலைக்குள் சனிக்கிழமை இரவும் பதற்றமான நிலைமை நீடித்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் கவச வாகங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் சென்று கைதிகளை அங்கிருந்த சிறைக்கூடங்களுக்குள் அனுப்பும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து காலை 6 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரால் அங்கு ஏற்பட்டிருந்த நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் அந்த சிறைச்சாலையில் விசேட பிரிவு கைதிகள் 20 பேர் பூசா உள்ளிட்ட வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை உறவினர்கள் நேற்று காலையிலும் சிறைச்சாலைக்கு முன்னால் கூடியிருந்தமையினால் அந்தப் பகுதியில் இரவு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் நேற்று பகல் முதல் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டது.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகளின் போது கைதிகளால் சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன முழுமையாக சேதமாகியுள்ளதாகவும், இங்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button