இலங்கை

செம்மணியில் ஒலித்த ஈழத் தாய்மார்களின் கண்ணீர்க் குரல்!; ஐரோப்பிய ஒன்றியத்திடமும் உறுதியான பதில் இல்லை

“கொலையாளிகள் எங்களுக்கு ஒருபோதும் நீதியையோ தீர்வையோ தரமாட்டார்கள். அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இதற்காக எத்தனையோ விசேட தூதுக்குழுக்களும் பிரதிநிதிகளும் இங்கு வந்து சென்றுவிட்டார்கள். ஆனால் இதுவரை எமக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அவர்கள் எதையும் தெரிவிக்கவில்லை” என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.

மேலும், “தங்களால் இயன்ற வரை உங்களுக்காகப் பணியாற்றுவோம் என்று ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் கூறியுள்ளனர். இருப்பினும், உறுதியான வாக்குறுதியை வழங்க முடியாது என்றும், இது குறித்துப் பேசுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்” என்றும் அவர் கூறினார்.

செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழு நேற்று புதன்கிழமை காலை பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிந்தனர்.இதன் போது அவர்களைச் சந்திக்க, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்த போதும் அவர்களில் இவரையே சந்திக்க ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு இணங்கியது.

இந்த நிலையில் அவர்களுடனான சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினரை செம்மணிப் புதைகுழி முகப்பில் சந்தித்தோம். அவர்களிடம் எங்களின் முதன்மையான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஒப்படைத்திருக்கிறோம்.

அவர்களுடைய பதில்களில் எங்களுக்குப் பெரிய அளவில் திருப்தி இல்லை. ‘எங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவோமே தவிர, அதற்கான தீர்வைப் பெற்றுத் தரும் அளவுக்கு எமக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியாது’ என்ற வகையில்தான் அவர்கள் எங்களோடு பேசினார்கள். எனினும், தங்களால் இயன்றவரை எமக்காக உழைப்பதாகக் கூறியுள்ளனர்.

எங்கள் உறவுகளுக்கு நடந்தது இனப்படுகொலையே. இந்த இனப்படுகொலையைச் சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான நீதி விசாரணையே எங்களுக்கு வேண்டும். உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ அல்லது ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ (OMP) போன்ற இலங்கை அரசால் அமைக்கப்படும் அமைப்புகளையோ நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இலங்கை அரசாங்கம் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்கப்போவதில்லை.

நாங்கள் எத்தனையோ ஆணைக்குழுக்களையும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களையும் சந்தித்துச் சலித்துப் போய்விட்டோம். அதன் பிறகே சர்வதேச ரீதியிலான விசாரணையை நாடி நிற்கிறோம். இத்தனை காலம் நாங்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்றால், சர்வதேசம் எங்களுக்குச் சரியான நீதியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில்தான். அதனாலேயே சர்வதேசத்திடம் எமது கோரிக்கைகளையும் மனுக்களையும் தொடர்ந்து கையளித்து வருகிறோம்.

இதுவரை எங்களோடு போராடிய 450-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் உறவுகளும் நீதிகிடைக்காமலேயே மரணித்துவிட்டார்கள். அவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். கொடூர யுத்தமும் இன அழிப்பும் நடந்த பின்னர், கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சர்வதேசம்தான் வெளிக்கொணர வேண்டும்.

கொலையாளிகள் எங்களுக்கு ஒருபோதும் தீர்வைத் தரப்போவதில்லை. அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதற்காக எத்தனையோ விசேட தூதுக்குழுக்களும் பிரதிநிதிகளும் வந்துபோயும், எமக்கு எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

எனவே, ‘ஐரோப்பிய ஒன்றிய விசே குழுவாக வந்திருக்கும் நீங்கள், ஐ.நா சபையிலோ அல்லது மனிதநேயத்தை நேசிக்கும் நாடுகளின் முன்னிலையிலோ எமது பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச நீதி விசாரணைக்கு உதவ வேண்டும்’ எனக் கேட்டு அறிக்கை அளித்திருக்கிறோம். அறிக்கையை மட்டுமல்ல, எங்களது உயிரையுமே உங்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அவர்களும், ‘தங்களால் இயன்றவரை உங்களுக்காகப் பணியாற்றுவோம்; ஆனால் உறுதியான வாக்குறுதியை உடனடியாக வழங்க முடியாது, இது குறித்து விவாதிப்போம்’ எனத் தெரிவித்ததாகக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button