உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிர்ச்சித் திருப்பம்: தற்கொலைக்கு முன் சி.ஐ.டி.யிடம் தெரிவித்த பல்வேறு இரகசியங்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன இறப்பதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மிக முக்கியமான சாட்சியங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியதாக தெரிவிக்கப்படும் மிக முக்கியமான சாட்சியம் ஒன்றின் விபரங்களை ஊடகவியலாளர் கல்ப குணரத்ன ‘மீமெஸ்ஸோ’ என்ற தனது யூடியூப் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இதற்கு முன்னர் அவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முக்கிய வாக்குமூலங்களை வழங்கியிருந்தாக ஊடகவியலாளர் கல்ப குணரத்ன பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் வழங்கிய இந்த வாக்குமூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் 2026 மார்ச் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியொருவரின் மனைவி சாரா ஜாஸ்மின் ஆகியோர் தொடர்பிலும், இந்திய புலனாய்வுத் அதிகாரி ஒருவருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் இந்த வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த யூடியுப் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான ‘சாரா ஜாஸ்மின்’ இறந்துவிட்டதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுரேஷ் சலே தேசிய பாதுகாப்புச் சபையில் வலியுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதும் விக்ரமரத்னவின் வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை நெரிசல் குறித்தும், பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான பொலிஸாரின் பங்களிப்பு குறித்தும் அவரது வாக்குமூலத்தில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் கல்ப குணரத்ன வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று, சாரா ஜாஸ்மின் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும், அவரை பற்றிய உறுதியான தகவலை புதுடெல்லி எதிர்பார்ப்பதாக இந்திய புலனாய்வுத் தலைவர் ஒருவர் தன்னிடம் தெரிவித்த விதம் குறித்தும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் இந்த வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் ஊடகவியலாளர் கல்ப குணரத்ன வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()