முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டு காயத்தால் உயிரிழந்துள்ளார்.
இவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை காலை வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுள்ளதுடன், இதன்போது அவ்விடத்திற்கு வந்த குடும்பத்தினரும் அயலவர்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருந்த அவரை முல்லேரியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு கொண்டு செல்லப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 2020 நவம்பர் 25 அன்று அவர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டதுடன், 2023 நவம்பர் 25 அன்று ஓய்வுபெறும் வரை பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார்.
30 வருடங்களுக்கும் மேலாக பொலிஸ் சேவையில் பணியாற்றிய சீ.டி. விக்ரமரத்ன, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.
இவர் தனது வீட்டில் இருந்த போது தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
![]()