கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம்; அர்ச்சுனாவின் பேச்சினால் பெரும் களேபரம்; அமைச்சர் சந்திரசேகருடன் மோதல் நிலை!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து ஏற்பட்ட அமளிதுமளியால் அமைச்சர் சந்திரசேகருக்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் மோதல் நிலை ஏற்பட்டதுடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் அர்ச்சுனா இராமநாதனை தாக்க முற்பட்டநிலையில் இடைநடுவில் கூட்டம் கைவிடப்பட்டது.
இந்தகூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் கடும் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாகும் நிலைமை ஏற்பட்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு அர்ச்சுனா இராமநாதனை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்து சொல்லுமளவுக்கு கூட்டத்தில் களேபரம் ஏற்பட்டது
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் முரளிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்கள அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஆரம்பமானது
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மத்திய மற்றும் மாகாண அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டிக்கொண்டிருந்தது.
இந்தநிலையில் கூட்டத்திற்கு தாமதமாக வந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், ஆரம்பம் முதலே முரண்படான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
திருவையாறு பகுதியில் அமைச்சர் லால் காந்தவின் தென்னை செய்கை விநியோகத் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார்.
எனினும், அந்தத் திட்டத்துக்கு இதுவரைநிதி விடுவிக்கப்படவில்லை என்றும்,உர மானியம் வழங்கப்படவில்லை என்றும் கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட செயலாளரை தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தியதுடன், ஊழல்வாதி என்றும் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த மாவட்ட செயலாளர்,
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல், ஆதாரம் இருப்பின் அதனை முன்வைக்குமாறு சவால் விடுத்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்வைத்த கருத்துகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தார்.
இதனைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சந்திரசேகரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இதன்போது, அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அத்துடன் அர்ச்சுனா இராமநாதன் வைத்திருந்த ஒரு ஆவணத்தை அமைச்சர் சந்திரசேகர் பறித்தெடுக்க முற்பட்டார். இதனால் கோபாவேசம் அடைந்த அர்ச்சுனா இராமநாதன் அமைச்சருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் ஒரு கட்டத்தில் அமைச்சரை தாக்கவும் தயாரானார்.இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு அர்ச்சுனா இராமநாதனை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்து செல்லுமளவுக்கு நிலைமை மோசமானது.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அர்ச்சுனா இராமநாதனுடன் கடுமையாக முரண்பட்டதுடன் அவரை தாக்குவது போன்று பாய்ந்து சென்றனர். இவர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர் .இதன்போது ‘இந்த அர்ச்சுனா என்ற நபர் அபிவிருத்திக் குழுகூட்டங்களுக்கு வந்து தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்துவதால் எந்தவொரு அபிவிருத்தியும் தமது ஊர்களுக்கு கிடைக்காமல் போகிறது’ என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியதுடன் அர்ச்சுனா இராமநாதனை உடனடியாக வெளியேற்றும்படி பொலிஸாருக்கு கூச்சலிட்டனர். அவர்களுடனும் அர்ச்சுனா இராமநாதன் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி முரண்பட்டார்.
இந்த நிலையில் அர்ச்சுனா இராமநாதனின் ஒழுங்கீனமான மற்றும் தரக்குறைவான நடத்தையைக்
கண்டித்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நான்கு பிரதேச செயலாளர்களும், ஏனைய திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அதிகாரிகள் வெளியேறிய பின்னரும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருடன் அர்ச்சுனா இராமநாதன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மோதலுக்கும் தயாரானார். முரண்பாடு முற்றிய நிலையில், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். இறுதியாக, பொலிஸார் தலையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை அங்கிருந்து அழைத்துச் சென்றதையடுத்து, முற்பகல் 11 மணியளவில் கூட்டம் குழப்பங்களுக்கு மத்தியில் இடைநடுவில் கைவிடப்பட்டது.
![]()