இலங்கை

அரசின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி மெளனம் சாதிக்கிறது; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் முறையற்ற மற்றும் மோசடி செயபாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சி அமைதிப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்றும், இது தற்போது நாட்டில் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்   நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசமே இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது இருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது என்னவென்றால், இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதான எதிர்க்கட்சி மிகவும் அமைதியாக இருப்பதுதான். நாங்கள் அடிக்கடி எழுத்து மூலமும் இந்த விடயத்தில் கோரிக்கைகளை விடுத்திருந்தோம். நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணிக்கு தலைமை தாங்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அது தொடர்பாகவும் அரசாங்கம் முன்னெடுக்கும் முறையற்ற செயற்பாடுகள், மோசடி செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மௌனமான போக்கை கடைபிடிக்கின்றது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை எமது கட்சியே முன்னெடுத்தது. கடந்த வருடத்தில் நுகேகொடயில் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அதில் இரண்டு கட்சிகளை தவிர ஏனைய கட்சிகள் கலந்துகொண்டிருந்தன. இதன்படி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் நாங்கள் இன்றும் ஈடுபடுகின்றோம். எமது கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது தாய்நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகள் நடக்குமாக இருந்தால் இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்படுகின்றோம். இதனாலேயே நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். இப்போதைக்கு தேர்தல் இல்லாத காரணத்தினால் சகல கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் தலைமைத்துவம் அவசியமில்லை. சகல கட்சிகளின் ஒன்றிணைவே அவசியமாக இருக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button