பலதும் பத்தும்

யாழ் கடுகதி ரயில் 6 நாட்கள் சேவையில்; புதன்கிழமை மாத்திரம் இல்லை

கொழும்பிலிருந்து (கல்கிஸை) யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை ) வரையான தினசரி கடுகதி ரயில் சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, இந்த ரயில் சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கிற்கு கடுகதி ரயில் சேவை இருக்காது என ரயில்வே திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்திருக்கும் ரயில் இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமைகளிலும் வழமை போன்று இந்தச் சேவையை நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே நிர்வாகத்தின் முன்னைய அறிவிப்பில் இந்த வாரம் முதல் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் ரயில் சேவையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையடுத்து, இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சேவையை இயன்றளவு வழமை போன்று நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்தச் சேவையை புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் சேவையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நல்லூர் உற்சவகாலம் வருவதையொட்டி புதன்கிழமை சேவையையும் வரும் 20ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு முழு அளவில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

காலையில் கல்கிஸை பகுதியில் இருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டை வழியாக யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் இந்த கடுகதி சேவை, மதியம் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு இரவு கல்கிஸையைச் சென்றடையவுள்ளது.

இதுவரையில் தினசரி நடைபெற்ற இந்தச் சேவை தற்போது புதிய ஒழுங்கின்படி புதன்கிழமை மாத்திரம் நடைபெறாது என்றும் புதன்கிழமை சேவையும் விரைவில் மீள நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button