பாதாள உலக குழுக்களுடன் தொடர்புபடுத்தி நாமல் மீது அவதூறு: CID-யில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இந்த முறைப்பாட்டைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்துள்ளார்.
இதையடுத்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பு
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அரசுக்குச் சார்பான தரப்புகளும் மற்றும் பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்புக் குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட தரப்பினரே இன்று ராஜபக்சக்களுக்குச் சேறுபூச முயற்சிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.
இது குறித்து அரசு பதில் கூற வேண்டும் முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல் தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
![]()