பலதும் பத்தும்

மண்ணை அள்ளியவன் மாறிய கதை

ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம், பிறருடைய மகிழ்ச்சியைக் கெடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்தது.

அந்தக் கிராமத்தில் வசிக்கும் அவர், வசதி படைத்தவர் மட்டுமல்ல; சமூகச் சேவகர் எனப் பெயரெடுத்தவர். பல சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் இவர், தன்னை மற்றவர்களுக்கு முன்னால் எப்போதும் ‘கெத்தாக’க் காட்டிக்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். ஆனால், பிறருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படும் குணம் கொண்டவர் என்று ஊர் மக்கள் அவரைப் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்தனர்.

இந்தச் சூழலில், காலிப் பகுதியில் உள்ள அவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் இல்லத்தில் திருமண நிகழ்வு ஒன்றை மிக விமர்சையாகத் திட்டமிட்டனர். வரவேற்பு நிகழ்வு நகரத்தில் உள்ள ஹோட்டலில் நடக்கவிருந்தாலும், மணமகளை வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்வு சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அந்தப் பொறாமைக் குணம் கொண்டவர் தனது வீட்டின் முன்னால் இருந்த பொதுப்பாதையில், லாரிக்கணக்கில் மண்ணைக் கொட்டத் தொடங்கினார். அது ஒரு சிறிய பாதை என்பதால், மண் கொட்டியது அந்த வீட்டாருக்கு பெரும் சிக்கலாக மாறியது. “பாழடைந்த பாதையைச் சரி செய்கிறேன்” என்று அவர் சாக்குப்போக்கு சொன்னாலும், பெய்து வரும் மழையில் அந்தப் பாதை சகதிக்காடாக மாறப்போவதை அந்த மணவீட்டார் உணர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே பிரதேச சபையிலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச சபை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரி, அந்தப் பாதையில் அனுமதி இன்றி மண் கொட்டியது சட்டவிரோதம் என்று கண்டித்தனர். மேலும், அண்டை வீட்டார் மகிழ்ச்சியாகத் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் வேளையில், இவ்வாறு அத்துமீறிச் செயல்படுவது வேண்டுமென்றே செய்யும் இடையூறு என்று கூறி, கொட்டிய மண்ணை மீண்டும் அகற்றுமாறு உத்தரவிட்டனர்.

வேறொரு வழியின்றி, அந்த நபர் தான் கொட்டிய மண்ணைத் தன் வீட்டிற்குள் மீண்டும் அள்ளத் தொடங்கினார். ஆனால் விதி வேறுவிதமாகச் செயல்பட்டது! அவர் மண்ணை அள்ளத் தொடங்கியதும், வானம் கருக்கிக் கொண்டு பலத்த மழையாகப் பொழியத் தொடங்கியது. மழைநீருடன் கலந்த மண், செம்மண் குழம்பாக மாறி, அவரை மேலும் பாடாய்ப்படுத்தியது. வேறு வழியின்றி, அந்தச் சகதியைத் தன் வீட்டிற்குள் அள்ளிக் கொட்ட வேண்டிய அவல நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

பிறருடைய மகிழ்ச்சியில் முட்டுக்கட்டை போடப்போய், தன் கைகளால் சகதியை அள்ளிப் பூசிக்கொண்ட அந்த நபரின் சுயரூபம் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு இருந்த அந்தச் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அந்த மழையில் கரைந்த சகதியைப் போல முழுவதுமாக மறைந்து போனது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button