சரியான நேரம் வந்து விட்டது; அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் உடன் ஒன்றுபடுங்கள்

பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கி பதவிக்கு வந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதனால் பொறுத்தது போதும்.இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான காலம் வந்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு, அவர்களை விரட்டுவதற்கு ஒன்றிணைய வேண்டும். அதேநேரம் எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அரசாங்கத்துக்கு எதிராக எமது வாயை முடியாது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வாக்குறுதியளித்த எதுவுமே இதுவரை இடம்பெறவில்லை. அரச துறைகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளன. வைத்தியசாலைகளில் பாரியளவில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை இருந்து வருகிறது. அதேபோன்று மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்து வருகிறது. வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள பலர் வைத்தியர் தொழிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கி, அவர்களை வைத்தியர்களாக நியமிக்குமாறு தெரிவிக்கின்றபோதும் அதனை சுகாதார அமைச்சர் செய்வதில்லை. ஏனெனில் சுகாதார அமைச்சர் வைத்தியராக இருந்தாலும் அவர் வரையறுக்கப்பட்ட மருத்து பயிற்சியை மேற்கொள்ளாததால், அவர் எமது வைத்தியசாலைகளில் பணியாற்றியதில்லை. அதனால் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு அவர் விருப்பமில்லை.
நாடெங்கும் பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை இருந்து வருகிறது. பட்டதாரிகள் நீீண்டகாலமாக தங்களை ஆசிரியர் தொழிலில் இணைத்துக்கொள்ளுமாறு போராடி வந்த நிலையில், கடந்த மாதம் ஆசிரியர் தொழிலிலுக்காக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டது. அந்த பரீட்சையிலும் அரசாங்க சேவையில் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இலகுவா முறையில் சித்தியடையும் வகையில் ,அவர்களுக்கு இலகுவான வினாக்கள் நடங்கிய பரீட்சை வினா பத்திரமும் பட்டதாரிகளுக்கு விடையளிக்க கஷ்டமான முறையில் தயாரிக்கப்பட்ட வினா பத்திரமும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விடயங்களை சுட்டிக்காட்டினாலும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்வதில்லை. அரசாங்கத்துக்கு எதிராக யாராவது கதைத்தால், அவர்களுக்கு எதிராக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை தெரிவித்து வழக்கு தொடுக்கிறார்கள். எனக்கு எதிராக பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்கு 4 வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. எத்தனை வழக்குகள் எனக்கு எதிராக தொடுத்தாலும் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் எனது வாயை மூடி முடியாது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம்.
அரசாங்கத்தில் இருக்கும் பலருக்கு மோசடி வழங்குகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன. ஆனால் அந்த வழக்குகள் விசாரணைக்கு வருவதில்லை. ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக கதைப்பவர்களுக்கு இருக்கும் வழக்குகள் தொடர்ந்து விசாரணைைக்கு எடுத்துக்கொள்ளப்படுகி்ன்றன. அதற்கு நாங்கள் பயப்படப்போவதில்லை. வழக்கு விசாரணைகளுக்கு நாங்கள் முகம்கொடுப்போம். ஆனால் எமது அரசாங்கம் ஒன்று அமையும்போது, இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் மோசடிகாரர்கள் அனைவரக்கு எதிராகவும் வழக்கு தொடுத்து, அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்.
எனவே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான காலம் வந்துள்ளது. அதனால் எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, அரசாங்கத்தை விரட்டுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
![]()