இலங்கை

ஊன்றுகோலுடன் பதவிக்கு வர மஹிந்தவும் ரணிலும் முயற்சி

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும ஊன்றுகோல் உதவியுடனும் சக்கர நாற்காலியிலும் பதவிக்கு வர நினைப்பதுடன் அவர்கள் அரசியலைக் கைவிடத் தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பதற்கு பொதுமக்கள் தரப்பிலோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவிதப் பிரச்சினைகளும் எழவில்லை .ஆனால், தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு எந்தவித வயது எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னமும் ஊன்றுகோல் உதவியுடன் நடந்தாலும் அரசியலைக் கைவிடத் தயாராக இல்லை.

அதேபோல், ரணில் விக்ரமசிங்கவும் தனது மருத்துவச் சிகிச்சைகளைச் செய்து கொண்டு, 70 வயதைக் கடந்த நிலையிலும் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். அவர்கள் நாற்காலியிலோ அல்லது சக்கர நாற்காலியிலோ அமர்ந்தாவது பதவிக்கு வர முடியும் என்ற நிலை இருக்கும்போது, நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதில் மாத்திரம் என்ன தவறு இருக்க முடியும்?

தங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களின் வயது எல்லை குறித்து எந்தவொரு சட்டமும் இயற்றப்படாத நிலையில், நீதித்துறையின் பரிந்துரைகளை எதிர்ப்பதன் பின்னணியில் உள்ள சுயநல நோக்கம் மிகவும் தெளிவானதாகும்.

தாங்கள் செய்த குற்றங்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு, அதற்கான விசாரணைகள் தீவிரமடையும் என்ற அச்சமே இவர்களின் இந்த எதிர்ப்புக்கு முதன்மைக் காரணமாகும். எனினும், நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்கவும், நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டவும் அரசாங்கம் தேவையான அனைத்து கடுமையான முடிவுகளையும் எடுக்கும்.

அத்துடன், இந்த நீதித்துறை சார்ந்த செயற்பாடுகளுக்கும் விசாரணைப் பணிகளுக்கும் நிதித் தேவை ஏற்படுமாயின், அதற்கான நிதியை தாராளமாக ஒதுக்கீடு செய்வதற்கும் அரசு தயாராக இருக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button