இலங்கை

வடபகுதி மீனவர்களின் கோரிக்கை; மோடிக்கும் விஜய்க்கும் விரைவில் தெரிவிக்கப்படும்

வடபகுதி மீனவர்களின் கோரிக்கைகளைச் செவிசாய்த்து இந்திய பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் எல்லோருக்கும் எங்களுடைய கஷ்ட நஷ்டங்களைக் கூறி, நாங்கள் படும் துன்ப துயரங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி, எங்களுக்கான ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாவுக்கு எடுத்துரைத்திருக்கின்றோம் என

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினுடைய உபதலைவர் தம்பிராஜா சந்திரதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினுடைய 83வது ஆண்டு நிறைவையொட்டி, பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் ராஜாவுடைய சந்திப்பின் போது, எங்களுடைய வடபகுதி மீனவர்கள் சார்பாக சில முன்மொழிவுகளை நாங்கள் இங்கே சமர்ப்பித்திருக்கிறோம்.

வடபகுதி மீனவர்கள் சார்பாக இங்கே பல பகுதிகளில் இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பிலே கலந்து கொண்டார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் இங்கே எங்களுடைய மீனவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினை சம்பந்தமாக, எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றோம். அவர் ஒரு தமிழர் என்ற ரீதியிலே எங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லாமலும் இருந்த காரணத்தினால், எங்களுடைய சொந்த மொழியிலேயே எங்களுடைய சகல பிரச்சினைகளையும் அவர் கேட்டறியக்கூடிய விதத்திலே நாங்கள் கூறியிருக்கின்றோம்.

குறிப்பாக, எங்களுடைய வாழ்வாதாரம், இந்திய மீனவர்கள் இழுவைமடி தொழிலை இங்கே எங்களுடைய பகுதியிலே மேற்கொள்வதால் எங்களுடைய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், பொருளாதார அழிவுகள் சம்பந்தமாக இங்கே ஒவ்வொரு பிரதிநிதியும் இங்கே எடுத்துக் கூறியிருந்தார்கள்.

அந்த வகையிலே, நாங்கள் இலங்கை அரசாங்கத்தினாலே 1983ம் ஆண்டு எங்களுடைய கடல் வள தடைச்சட்டம் இடப்பட்ட காலத்தில் இருந்து நாங்கள் எங்களுடைய தொழிலை மேற்கொள்வதற்கு எந்தவிதமான இடையூறுகளை மேற்கொண்டிருந்தோம், எங்களுடைய வாழ்வாதாரமும் எங்களுடைய கடல் வளமும் எந்தளவு தூரம் 83ம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்கள் சூறையாடிச் சென்று இருக்கிறார்கள் என்பதையும், அதனாலே எங்களுடைய வாழ்வாதாரம் எந்தளவு தூரம் அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் அவருக்கு தெளிவுபடக் கூறியிருக்கின்றோம். குறிப்பாக இந்திய மீனவர்கள் எங்களுடைய அந்த பொருளாதாரத்தை அழிப்பதற்கு எவ்வளவு தூரம் முனைந்திருக்கிறார்கள் என்பதையும், எங்களுடைய கடல் வளத்தை எப்படி அழித்திருக்கிறார்கள் என்பதையும் அவருக்கு மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறியிருக்கின்றோம். அதையும் அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டறிந்திருக்கின்றார்.

அந்த வகையிலே, நாங்கள் இனிமேலும் இந்திய மீனவர்கள் எங்களுடைய எல்லை தாண்டி வந்து எங்களுடைய வளங்களை அழிக்காமலும், எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு பங்கம் விளைவிக்காமலும் இந்திய மீனவர்களுக்கு எடுத்துக் கூறி, இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாட்டு மாநில அரசாங்க பிரமுகர்களுக்கும் இந்த விடயம் சார்பாக எடுத்துரைத்து, எங்களுடைய தொப்புள்கொடி உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்த விதத்திலும் கருத்து வேறுபாடோ, வேற்றுமைகளோ, பிரச்சினைகளோ ஏற்படாமல் தீர்ப்பதற்கு ஆவன செய்யும்படி ராஜாவை நாங்கள் வினயமாகக் கேட்டிருக்கிறோம்.

அந்த வகையிலே, உடனடியாக ராஜாவும் எங்களுடைய கோரிக்கைகளைச் செவிசாய்த்து இந்திய பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் இந்த விடயத்தைக் கூறி, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் எல்லோருக்கும் எங்களுடைய கஷ்ட நஷ்டங்களைக் கூறி, நாங்கள் படும் துன்ப துயரங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி, எங்களுக்கான ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவருக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். அந்த வகையிலே, நாங்கள் மிகவும் ஆணித்தரமாக நம்பக்கூடிய வகையிலே அவர்கள் எங்களுடன் உரையாடிச் சென்றிருக்கின்றார். அவருக்கு எங்களை இங்கே சந்தித்து, எங்களது குறைநிறையைக் கேட்டறிந்ததற்கு முதற்கண் அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, இலங்கை அரசாங்கத்துக்கும் இங்கே நாங்கள் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

குறிப்பாக, இந்த ஏற்பாட்டைச் செய்து தந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், செயலாளர் மற்றும் தோழர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலிலே கலந்து கொண்டார்கள். அந்த வகையிலே, இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு சென்று, எல்லை தாண்டி வரும் மீனவர்களை இலங்கை கடற்படையும் இலங்கை அரசாங்கமும் கட்டுப்படுத்தி, எங்களுடைய வாழ்வாதாரமும் எங்களுடைய வளமும் காக்கப்பட வேண்டும் என்று வினயமாக வேண்டுவதோடு, இலங்கைத் தமிழ் மக்களாகிய நாங்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வந்தோம், இப்பொழுதும் நாங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு தொடர்ந்து துன்பியல் வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே, எங்களுடைய வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததிக்கு நாங்கள் விட்டுச் செல்லக்கூடிய வகையிலே கடல் வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று தயவாக வேண்டி நிற்கிறோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button