சலே – பிள்ளையான் நெருங்கிய தொடர்பு குறித்து கருணாவிடம் சி.ஐ.டி தீவிர விசாரணை!; மேலும் பலரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீண்ட நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தரப்பினருக்கும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேக்கும் இடையில் காணப்பட்ட நெருங்கிய தொடர்பு மற்றும் அவர்கள் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, பிள்ளையானின் குழுவினருக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக சுரேஷ் சலே நபர்களைத் தொடர்புபடுத்திக் கொடுத்துள்ளார் என்றும், அதற்கான நிதி உதவிகளை அவர்களே வழங்கியுள்ளனர் என்றும் கருணா ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்களை ஆதராம் காட்டி அந்த ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கருணா மற்றும் பிள்ளையான் ஆகிய இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து அரசியலில் இருந்தபோதிலும், அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகால அரசியல் பகைமை நிலவி வந்தமை அரசியல் அரங்கில் பரவலாக அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
இதேவேளை, பிள்ளையான் தரப்பினரால் பொலனறுவை வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் ஒன்று தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிங்கள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலும் பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகருக்குள் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தவர்கள் யார் என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![]()