இலங்கை

70 இலட்சத்திற்கு பேராசைப்பட்டு திலீப பீரிஸ் தனது சட்டத்தரணி பதவியை இழக்க நேரிடும்; கம்மன்பில எச்சரிக்கை

இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரி லெப்டினன்ட் சாந்த ஜயதிலகவுக்கு வழங்கப்பட்ட வீர விருதுகளை அவமதிக்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் களத்தில் ஆற்றிய அர்ப்பணிப்பிற்காக லெப்டினன்ட் சாந்த ஜயதிலக ‘வீர விக்ரம விபூஷண’ உள்ளிட்ட ஏழு பராக்கிரம பதக்கங்களைப் பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.

இந்தப் பதக்கங்களை “தகடுத் துண்டுகள்” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படும் திலீப பீரிஸின் கருத்து, இராணுவ வீரர்களின் தியாகத்தையும் கௌரவத்தையும் அவமதிப்பதாகும் என அவர் தெரிவித்தார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனிப்பட்ட சட்ட அதிகாரம் கொண்டவர் அல்ல; அவர் சட்டமா அதிபரின் பிரதிநிதியாகவே நீதிமன்றில் ஆஜராகிறார் என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

ஒரு தகடு அடித்துவிட்டுச் சென்றாலும் 10 இலட்சம் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியிருந்ததை மனதில் வைத்து, இந்த 7 பதக்கங்களுக்கும் சேர்த்து 70 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளும் பேராசையில்தான் திலீப பீரிஸ் இவ்வாறு இராணுவ வீரர்களை அவமதித்தாரோ என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயர் நீதிமன்ற விதிகள் 53 மற்றும் 54 இன் படி, நீதிமன்றில் வாதிடும் சட்டத்தரணிகள் அவமதிப்பான கருத்துகளை வெளியிடக் கூடாது என்பதால், திலீப பீரிஸ் அந்த விதிகளை மீறியுள்ளதாகவும், அவரது சட்டத்தரணி உரிமத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனுடன், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கைதிகள் மோதல் தொடர்பிலும் கம்மன்பில கருத்து வெளியிட்டார். அந்தச் சம்பவத்திற்கு கைதிகளையோ அதிகாரிகளையோ மட்டும் குறை கூற முடியாது என்றும், சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலே இத்தகைய வன்முறைகளுக்கான அடிப்படை காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளின் மொத்தக் கொள்ளளவு 10,395 கைதிகள் மட்டுமே என்றாலும், 2026 ஜூன் 29ஆம் தேதி நிலவரப்படி 42,034 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் உணவு, கழிவறை, உறங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button