இலங்கை

வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிக்க அரசு சதி

வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களையும், திணைக்களங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துவிட்டு, அதற்குப் பின்னர் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் சதிசெய்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது என இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு செல்வதற்கு இடம்பெற்றுவரும் முன்னெடுப்புகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு செல்வதற்கு இடம்பெறும் முன்னெடுப்புக்களை நாங்கள் தீர்க்கமாக எதிர்க்கின்றோம். மத்தியின் கீழ் இவற்றைக் கொண்டுசென்றால் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும், விரைவாக அபிவிருத்தியடையும் எனவும் கூறுகின்றனர். இந்தக் கூற்று வேடிக்கையானது. மத்தியின் கீழ் ஆதார வைத்தியசாலையை கொண் டுசென்றால் மருத்துவர்கள் அனைவரும் மாறிவிடுவார்களா? அல்லது கூடுதலான மருத்துவர்கள் இறக்குமதி செய்யப்படுவார்களா? ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தூய நோக்கம் இருந்தால் மாகாணசபையின் கீழ் அதைப் பேணியபடி இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தையும் மத்தியின் கீழ் கொண்டு செல்வதற்காகவே தேர்தல் பிற்போடப்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகின்றது.

வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களையும், திணைக்களங்களையும், பாடசாலைகளையும் மத்தியின் கீழ் எடுத்துவிட்டு வெற்றுக் கோதுக்கே தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா எனவும் நாங்கள் சிந்திக்கின்றோம். எனவே இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும் – என்றும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button