கதிர்காம பாதயாத்திரையில் ‘சுப்பிரமணி’க்கு சிக்கல்

சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையில் பங்கேற்கும் ‘சுப்பிரமணி’ எனும் செல்லப்பிராணிக்கும், அதனுடன் வரும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, காட்டுப்பகுதிக்குள் சுப்பிரமணியை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார்.
சுப்பிரமணிக்குக் காட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட நேரடி உரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினருடன் வரும் ‘சுப்பிரமணி’ எனும் இந்தச் செல்லப்பிராணி, சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “குறித்த செல்லப்பிராணி பாதயாத்திரை செல்வது பிரச்சினையல்ல; ஆனால் காட்டிற்குள் பயணிக்கும் சக மனிதர்களின் பாதுகாப்பினையும், பாதயாத்திரை மேற்கொள்ளும் அந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டே, சுப்பிரமணியை காட்டிற்குள் அழைத்துச் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “காட்டுப்பாதை ஜூலை 9 அல்லது 10-ஆம் திகதிகளில் திறக்கப்படுவதற்கு முன்னர், பாணமையில் வைத்து சுப்பிரமணியை நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம். பின்னர், பாதை திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் ஆலயக் குருவின் வேண்டுகோளுக்கு இணங்க அனுமதி வழங்கிவிட்டு, அதனை வாகனத்தின் ஊடாகக் கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்வோம். அங்கு பிள்ளையாரடி எனும் இடத்தில், பாதயாத்திரைக் குழுவினரிடம் சுப்பிரமணியை ஒப்படைப்போம். அதன் பின்னர், அவர்களில் ஒரு அடியார் சுப்பிரமணியை அழைத்துச் செல்லவிருப்பதால், எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.
அத்துடன், உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுத்தை தாக்கி விவசாயிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு செல்லப்பிராணிகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.



![]()