இலங்கை

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது! மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே நியாயமான மற்றும் தார்மீக கோரிக்கையென அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் இந்தக் கோரிக்கைகள் எந்தவித திரிபும் இன்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக ஊடகங்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

கடந்த 17 ஆண்டுகளாக காணி விடுவிப்புக்காக பல்வேறு வழிகளில் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள் இதுவரை எந்தவித நிரந்தரத் தீர்வும் கிடைக்கவில்லை “இனி வாக்குறுதி அரசியலும், வலியுறுத்தல் அரசியலும் தேவையில்லை. எமக்கு தற்போது தேவையானது செயற்பாட்டு அரசியல் மட்டுமே. ஜனாதிபதி உடனடியாக தலையீடு செய்து காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2026) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே இவ்வாறான நிலைமைகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், மக்கள் தங்களது பூர்வீக நிலங்களில் மீண்டும் குடியேறி சுதந்திரமாக விவசாயம் செய்து வாழ்வதற்கான உரிமையையே கோருவதாகவும், பூர்வீக மக்களுக்கான காணிகளை மீள வழங்குவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button