இலங்கை

கைத் தொலைபேசி, கணினியின் கடவுச்சொல்லை ஒப்படைக்கவும்; சலேக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டளார் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, 23 பக்கங்களைக் கொண்ட உத்தரவை நீதிமன்றில் வாசித்த நீதவான், வழக்கின் சந்தேக நபரான சுரேஷ் சலேவுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

23 பக்கங்களைக் கொண்ட உத்தரவு நீதவானால் வாசிக்கப்பட்ட போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு சுரேஷ் சலே தரப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார்.

அத்துடன் அவரது குடும்பத்தினரால் சுரேஷ் சலேக்கு வழங்குமாறு கோரப்பட்டிருந்த பத்திரிகைகள் மற்றும் எழுது பொருட்களை வழங்குவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இதேவேளை குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 127 ஆவது பிரிவின் கீழ், குற்ற ஒப்புதல் அல்லாத தன்னிச்சையான வாக்குமூலமொன்றை வழங்குவதற்குக் கோரப்பட்ட அனுமதியையும் நீதவான் நிராகரித்தார். இவ்வாறானதொரு வாக்குமூலத்தை அளிப்பது விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக சான்றுகள் இல்லை எனக் கூறி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் மூன்றாவது சந்தேக நபரின் சட்டத்தரணியை கண்காணிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சலேயை, எதிர்வரும் வழக்கு விசாரணை தினங்களில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button