நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது!… சங்கர சுப்பிரமணியன்


அன்று வியாழக்கிழமை. வாரத்தில் ஏழு கிழமைகள் உள்ளன. ஒவ்வொரு கிழமைகளை ஒவ்வொரு கடவளுக்கென்று மனிதன் வகுத்து விட்டான். இருப்பவர்களோ ஏகப்பட்ட கடவுளர். இதில் கடவுளருக்கு கிழமை பற்றாக்குறை. கடவளுக்கே இந்த நிலை என்றால் பற்றாக்குறையால் அரசு வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழுவதில் வியப்பில்லை.
பெங்களூரில் மல்லேஸ்வரம் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் முன் வெகு நேரமாக வேல்முருகன் கண்மூடி மனமுருக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அக்கோவிலுக்கு அடிக்கடி வருபவர். அதனால் கோவிலில் பூஜை செய்பவருக்கும் வேல்முருகனுக்கும் நல்ல பழக்கம். ஆதலால் அவர் வேல்முருகன் வேண்டுதலை முடித்தபின்,
“என்ன வேல்முருகா ரொம்ப நேரமா பாபாகிட்ட வேண்டிக்கிட்டீங்க. வேண்டுதல வெளியில சொல்லக்கூடாது. உங்கள் வேண்டுதல் பலிக்கும்” என்றார்.
“அப்படி ஒன்னுமில்ல. என் வேண்டுதலை சொல்றன். என் நண்பன் அவ்வளவாக கோவிலுக்கு போகமாட்டார். அவர் கனவில் பாபா வந்திருக்கிறார். நான் ஒரு வியாழக்கிழமையும் தவறுவதில்லை. ஆனால் எனக்கு காட்சி தர மாட்டேன் என்கிறாரே? என்று ஆதங்கத்துடன் சொன்னான்.
“அப்படியா? ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும். ஒரு நாள் அதன் காரணம் தெரியவரும” என்று ஆறுதல் சொன்னார்.
சில வாரங்கள் உருண்டோடின. ஒரு நாள் மெஜஸ்டிக்கில் உள்ள பிரபலமான உணவகத்தின் அருகே சாய்பாபாவைக் கனவில் கண்ட தனது நண்பன் தனராஜைக் கண்டான். என்னப்பா இந்தப் பக்கம்? வா காபி சாப்பிடலாம் என்று அழைக்கவே இருவரும் உணவகத்துக்குள் நுழைந்தனர்.
காலை எட்டு மணி இருக்கும் என்பதால் காலைச் சிற்றுண்டிக்காக உணவகத்தில் கூட்டம் அலைமோதியது.
“ஏனு பேகு? ஹேள்ரீ “ என்றார் சர்வர்.
“பிஸியாக ஏனு இதே?”
“ரவா இட்லி, சௌசௌபாத், ஆனியன் ரோஸ்ட்…” என்று அடுக்கினார் சர்வர்.
“இரடு பிளேட் சௌசௌ பாத் கொடீ”
“இல்ல பேடா ஒந்து பிளேட் சாக்கு” என்று தனராஜ் சொல்லவும் சர்வர் சென்றான்.
சர்வர் சென்றவுடன் என்னப்பா என்ன ஆச்சு அதுக்குள்ள காலை உணவை முடிச்சுட்டியா என்று வேல் முருகன் கேட்கவும் அவன் நான் இன்றைக்கு ஒரு பொழுது என்றான். அதைக்கேட்ட வேல்முருகன் இன்று எதற்காக ஒருபொழுது என்றுகேட்டான்.
அதுவா இப்ப கொஞ்சகாலமாக இப்படித்தான். இரண்டு மாதத்துக்கு முன்னே அசோக்நகர் வசந்தபவனில் சந்தித்தோம் இல்லையா? அப்ப நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா? என்றுகேட்டதும் ஞாபகம் இல்லையே என்றான் வேல் முருகன். நல்ல கதையாப் போச்சு.
போகட்டும் இன்று என்ன கிழமை என்பதாவவது ஞாபகம் இருக்கா? என்றவன் கேட்டதும் ஏன் இல்லாமல்? இன்று வியாழக்கிழமை. இன்றைய தினத்தை மறப்பேனா? என்றான் வேல்முருகன். இன்று வியாழக்கிழமை என்கிறாய் ஒரு பொழுது இல்லையா? அன்று நான் இதேபோல் காலையில் ரவா இட்லி ஆர்டர் செய்தபோது வேண்டாம் இன்று ஒரு பொழுது என்று மறுத்தாயே? ஞாபகம் இருக்கா? என்று கேட்டபடியே,

“ இன்று வியாழக் கிழமை. ஒரு பொழுதில்லையா? சௌசௌ பாத் சொல்லியிருக்க?” என்றான்.
“ஆமாம்பா. அப்போது ஒரு வேண்டுதலுக்காக ஒன்பது வாரம் காலை உணவைத் தவிர்த்து ஒருபொழுது இருந்தேன். அந்த வேண்டுதல் எப்பவோ முடிந்து விட்டது.”
“அப்படியா? அது எனக்கு தெரியாது?
“அதுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்? நீ ஏன் இன்றைக்கு சௌசௌ பாத் வேண்டாமுன்னு சொன்ன?”
வேல் முருகன் கேட்டதற்கு நீ ஒரு பொழுது என்று சொன்ன நாளில் இருந்து இன்றுவரை வியாழக்கிழமைகளில் நான் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று பதில் சொன்னான் தனராஜ். தனராஜ் சொன்னதைக் கேட்டதும் பொட்டில் அடித்தது போல் இருந்தது. மல்லேஸ்வரம் சாய்பாபா கோவிலில் பூஜாரி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
தன்னை ஒரு தீவுர சாய்பாபா பக்தன் என்று எண்ணி வந்த அவன் எண்ணத்தில் சம்மட்டி அடி விழுந்தது. கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் மட்டுமோ ஒரு பொழுது, பூஜை புனஷ்காரம் என்று செய்வதால் மட்டுமோ ஒருவன் பக்தன் ஆகிவிடுவதில்லை என்பதை உணர்ந்தான்.
ஒருவன் தனது அன்றாட கடமையை ஒழுங்காக செய்தாலே பக்திதான். நான் ஒரு வேண்டுதலுக்காக ஒன்பது வியாழக்கிழமைகள் மட்டுமே காலை உணவை தவிர்த்து ஒரு பொழுது இருந்தேன். ஆனால் இவனோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து வியாழக்கிழமைகளில் காலை உணவைத் தவிர்த்து வருகிறான்.
நம் முன்னோர்கள் வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும் அதன் மூலம் உடல் நலனைப் பேணவும் இதுபோன்ற விதிமுறைகளை வகுத்துள்ளார்கள். நாம் அதனுடன் வேண்டுதலை சம்பந்தப் படுத்தி கடவுளிடம் எதையாவது எதிர்பார்க்கிறோம். அந்த ஒரு பொழுதின் மூலம் உடல் நலமாக இருப்பதை மறந்து விடுகிறோம்.
நான் ஒரு பொழுது இருந்தேன் கடவுள் என் கனவில் வரவில்லை. நண்பன் கனவில் வருகிறார் என்று பலவாறு எண்ணியபடியே தனராஜிடம் ஏதோ பேசியபடி சௌசௌ பாத்தை சாப்பிட்டு முடித்தான். சிறது நேரத்தில் காபி வந்தது. இருவரும் காபி குடித்தனர். சூடான காபியில் புகை எழுந்து மேலே சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
ஆனால் அவனையறியாமல் தனராஜ் அவன் மனதில் உயர்ந்து கொண்டிருந்தான். கனவில் பாபா வராதது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. வாரம் ஒருநாள் காலை உணவை தவிர்ப்பது உடல் நலனுக்கு எவ்வளவு உகந்தது என்ற ஒன்றே பெரிதாகத் தெரிந்தது.
ஏய் ! வேலு என்ன ஆச்சு உனக்கு சௌசௌ பாத் வேண்டாம்னு சொன்னது கோபமா. அப்போது இருந்தே ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படி என்ன சிந்தனை. ரொம்பவும் சிந்திக்காதே என்று நண்பன் சொல்லவும் சர்வர் கொடுத்த பில்லை வாங்கியபடி பணம்கொடுக்குமிடம் நோக்கி சென்றார்கள்.
![]()