வன்னியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து வரும் அரசு; 40 ஏக்கருக்குரிய மரங்கள் கடத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, அபிவிருத்தியென்ற பெயரில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து சுற்றுச்சூழல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை செய்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சத்தியலிங்கம் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. அதாவது எமது மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட மக்களின் நீர் தேவைக்காக பெருந்தொகையான,ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து ஆறாயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படவில்லையா? சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அபிவிருத்தியென்ற பெயரில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழிக்கும் செயற்பாடுகளை செய்கின்றது.
வவுனியா பம்பைமடு என்ற பிரதேசத்தில் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வனவள திணைக்கள அலுவலகம் உள்ள பிரதேசத்தில் 40 ஏக்கருக்கும் மேலான அடர்ந்த ஒதுக்குக்காடு சுத்தம் செய்யப்பட்டு அங்குள்ள மரங்கள் கடத்தப்பட்டுள்ளன. வனவள திணைக்கள அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கையில் வடகிழக்கு முழுவதும் கனிய மண்ணை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? அதேபோன்று எமது வீதிகளில் வெள்ளையர்களால் நடப்பட்ட பல நூறு வயதுடைய மரங்களை எவ்வித காரணங்களும் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வெட்டி அகற்றப்படுகின்றது. இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றீடாக ஒரு மரமும் நடப்படவில்லை. இது சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லையா?
இது மட்டுமன்றி எமது பிரதேசங்களில் மணல் அகழ்வு, கல் அகழ்வு, கிரவல் அகழ்வு சட்டத்திற்கு புறம்பாக நடக்கின்றது. சட்டத்தில் உள்ளவாறு அவற்றை எடுத்தவர்கள் அங்கு செய்ய வேண்டியவற்றை செய்வதில்லை. அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
![]()