மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கக்கூடாது

13 பிளஸ், மைனஸ் என்று அல்லாமல் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போது இருக்கும் அதிகாரங்களையாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில்,
தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடவுள்ள நிலையில், சூழல் என்ற விடயம் அரசியலமைப்புக்கு சமாந்திரமான பட்டியலுடன் செயற்படுத்தப்படும் விடயமாகும். முன்வைக்கப்படவுள்ள திருத்தம் மூலம் மாகாண சபைகள் நிறுவனங்களை கண்காணிப்பது மாகாண சபைகள் பட்டியலுக்கு உட்பட்ட பொறுப்புகளாகும். அதேபோன்று 6ஆவது மற்றும் 7ஆவது சரத்தின் விதிகளுக்கு உட்படாத மாகாண சபைகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதானது மாகாண சபைகள் தொடர்பான 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீக்குவதாக அமையும்.
எவ்வாறாயினும் நாங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க கடப்பட்டுள்ளோம். அது நாட்டின் மேன்மையான சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதிக்கும் வகையில் அதற்கு சமாந்திரமான பட்டியலில் உள்ள சூழல் விடயத்தில் மாகாண சபைகளிடம் இருக்கும் அதிகாரங்களில் கைவைப்பது பொருத்தமற்றது.
அதேபோன்று இதற்கு தீர்வுகாணக்கூடிய சிறந்த முறை என்னவென்றால் கூடிய விரைவில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு தேர்தலை நடத்தும் போது அரசியல் அதிகாரம் நியமிக்கப்பட்டு மாகாண சபைகளிடம் இருக்கும் அதிகாரங்களை பாதுகாக்கும் நிலைமை உருவாகும்.
இதனால் 13 பிளஸ், 13 மைனஸ் அன்றி 13ஆவது திருத்தத்தில் உள்ள வசதிகளுக்கமைய மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.
![]()