பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் இல்லையேல் ஜீ.எஸ்.பி. பிளஸும் இல்லை

தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாக திருத்தி புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என்று முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாங்கள் கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலக அதிகாரிகளை சந்தித்தோம். இதன்போது எமது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நிவாரணங்களை குறைக்கவோ அல்லது முற்றாக நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். அவ்வாறு செய்தால், மக்களுக்கு வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிடும் என்பதையும் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். அந்தக் கலந்துரையாடலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தை இவ்வாறே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால், நாம் கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் சரத்துக்கள் அப்பட்டமாக மீறப்படுவதாக நீண்ட காலமாகத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு நடந்தால், ஜீஎஸ்பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முடியாமல் போகும். எனவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பொருத்தமான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது இருப்பது மிகப்பழைமையான சட்டமாகும்.
இதேவேளை, நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதாக எழுத்துமூல வாக்குறுதி வழங்கியிருந்தேன். ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்போதைய நீதி அமைச்சர் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்தார். அதற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த முன்மொழியப்பட்ட சட்டமானது, பழைய சட்டத்தை விடவும் பாதகமானது என்று அந்த விமர்சனங்களில் கூறப்பட்டிருந்தது. இது சட்டத்தரணிகள், சிவில் சமூகம் மற்றும் தொழில் வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு சட்டம் என்பதைச் சொல்ல வேண்டும். இந்தச் சட்டத்தை இந்த நிலையில் சட்டமாக்க முடியாது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கமைய, வேறொரு சட்டத்தைத் தயாரிப்பதாக அரசாங்கம் கூறியது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய சட்டமூலத்தை சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் கிளிநொச்சியில் கூறினார். அந்தப் புதிய சட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்று எவருக்கும் தெரியாது. அனைவரது கருத்துக்களாலும் செழுமைப்படுத்தப்பட்ட, சர்வதேச சட்டங்களுக்கு இணங்கக்கூடிய சட்டம் ஒன்று அவசியமாகும். இந்தச் சட்டத்தை சரியாகச் சமர்ப்பிக்காவிட்டால், ஜீஎஸ்பி. பிளஸ் சலுகைகள் இல்லாமல் போகலாம். அவ்வாறு நடந்தால், பொருளாதாரத்தில் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
![]()