யாழ்.பிரதான வீதியில் அர்ச்சுனாவின் பெரிய பதாகைக்கு ‘செருப்பு மாலை’; அங்கு வந்து அதனை அகற்றினார்

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை காலை அர்ச்சுனா இராமநாதனின் பெரிய பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல்,கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , வியாழக்கிழமை இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் கஜேந்திரகுமார் எம்.பி.உட்பட பலருடன் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதுன் மிகவும் அநாகரீகமாகவும் நடந்துகொண்டது தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் , அருச்சுனாவின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ,யாழ்.பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதே நேரம் அப் பகுதிக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த பதாகை யாரால் காட்சிப்படுத்தப்பட்டது? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பிலான படங்கள், காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அப்பகுதிக்கு சென்ற அர்ச்சுனா இராமநாதன் செருப்பு மாலை போட்டிருந்த தனது பதாகையை கிழித்து எடுத்துச் சென்றார்.
![]()