உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தனது விசாரணை அறிக்கையை அமெரிக்கா கையளிக்குமா?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய விசாரணைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தகவல்கள் தற்போது அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பணியகம் (எப்.பி.ஐ) மற்றும் அமெரிக்க நீதித்துறை வசம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியில் அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் இந்தத் தகவல்களை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளதுடன், அரசாங்கம் அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்திருந்தால், அதற்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பதில் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான அமெரிக்க விசாரணை மற்றும் அறிக்கை ஒன்றை, அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது..
இதற்கமைய, அமெரிக்காவின் எப்.பி.ஐ நிறுவனம், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுடன் இணைந்து விரிவான விசாரணையை நடத்தி, பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
2020 நவம்பர் 12 அன்று, எப்.பி.ஐ இன் விசேட முகவர் மெரிலி ஆர். காட்வின் என்பவரால் கலிபோர்னியா நீதிமன்றத்தில் 71 பக்கங்களைக் கொண்ட மூலவாக்குமூலம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 11 அன்று லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பலர் ஏற்கனவே இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தத் தகவல்கள் அனைத்தும் அமெரிக்க விசாரணைப் பிரிவுகள் மற்றும் நீதித்துறை வசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் இவற்றை அணுகுவதற்கோ அல்லது பெற்றுக்கொள்வதற்கோ கோரிக்கை விடுத்துள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()