உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; அமெரிக்கா – ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் ஈரான் ட்ரோன் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக அமலில் இருந்து வந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் சவாலுக்குள்ளாகியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க வீரர்கள் ஆளில்லா படகின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் பல பகுதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள ஜோர்தன், குவைட் மற்றும் Bahrain ஆகிய நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.

இந்த திடீர் மோதல், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஈரான் தனது இறையாண்மையை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை தமக்கு இருப்பதாக அறிவித்துள்ளதுடன், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு ஈரானே காரணம் என ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button