இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க கம்மன்பில, விமல், திலித் பெரும் சதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மறைமுகத் தடைகளை ஏற்படுத்தி, விசாரணைகளை சீர்குலைக்க அரசியல் பின்னணியைக் கொண்ட குழுவொன்று திட்டமிட்ட ரீதியில் செயல்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டமிட்ட செயல்களுக்குப் பின்னால் உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தொடர்புடைய நபர்கள் இருப்பதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நேற்று திங்கட்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இடையீட்டு மனுவொன்றின் ஊடாக அறிவித்த போதே, இந்த விடயத்தையும் கூறியுள்ளனர்.

தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபரான சுரேஷ் சலே, இந்த விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு வெளியில் இருந்து உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர போன்ற அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் ஆதரவளித்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை வெளிவராத அரசியல் பின்னணிகள் மற்றும் அரசியல் தொடர்புகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அதனை தடுக்கும் நோக்கிலேயே, இந்த குழுவினர் திட்டமிட்டு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button