தோண்டத் தோண்ட குவிகிறது; செம்மணியில் நேற்று மட்டும் 16 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் நேற்று 16 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 4 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள் அடங்கலாக ஆறு மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 318 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 302 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சான்றுப் பொருட்கள் எதுவும் அடையாளம் காணப்பட்டவில்லை. மேலும் அகழ்வில் ஆறு மனித என்பு கூடுகள் இணைந்த என்பு குவியலொன்றும் அடையாளம் காணப்பட்டு 20வது மனித என்பு கூட்டு குவியல் எனப் பெயரிடப்பட்டது. அந்த குவியலில் உள்ள மனித எலும்புக்கூடுகளில் ஒன்று, கால்களை மடக்கிய நிலையில் காணப்பட்டது. மேலும் அகழ்வு நடவடிக்கைகளின் போது பல சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டன. அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – என்றார்.
![]()