முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விரைவில் கைது செய்யத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான திட்டமொன்று உள்ளதாக அவரின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், நவ ஜனதா பெரமுன கட்சியின் தலைவருமான சுகீஷ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே கோதாபய ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிடப்படுவதாக சுகீஷ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யும் நோக்கத்திலேயே குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் வெளிநாட்டு பயணத் தடைக்கான கோரிக்கையை விடுத்து அதனைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவரை கைது செய்ய முயற்சிப்பது அரசியல் நோக்கத்தினை அடிப்படையாக கொண்ட செயற்பாடு என்றும் சுகீஷ்வர பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிற்கும் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு கடந்த 3ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையவர்களாக முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, இராணுவ கேர்னல் மொஹமட் அன்சார் மற்றும் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உதலாகம ஆகியோரின் பெயர்கள் குற்றப் புலனாய்பு பிரிவினரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த மூவருக்கும் நீதிமன்றத்தால் பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]()