இலங்கை

அநுரவின் ஆட்சியை அகற்ற வேண்டும்;  அனைவரும் ஒன்றிணையுங்கள்-தலதா அழைப்பு

நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் பலவீனப்படுத்தி, ஒரே கட்சி ஆட்சியை நிலைநிறுத்த முயற்சிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் நண்பர்களோ, எதிரிகளோ என்ற பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்துக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து நடத்தப்படவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணியின் ஊடாக அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு கட்சிகளின் பங்கேற்புடன் கண்டி அம்பிட்டியவில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொய்களைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் நாட்டில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதனை ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். தனிநபர்களின் அல்லது சில ஊடகங்களின் விருப்பங்களுக்கு அமைவாக கட்சித் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறது.

உள்ளூராட்சி மன்றங்களில் தனிக் கட்சியால் ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலைகளில், ஒன்றுபட்ட எதிரணியாக நாம் அனைவரும் இணைந்து அதிகாரத்தை அமைத்தோம். அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி, தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் கிடைத்திருந்தபோதிலும், அரசாங்கம் ஒரு வருடத்தை நிறைவு செய்வதற்கு முன்பே ஒன்றுபட்ட எதிரணியாக நாம் அணிவகுக்க முடிந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாதிருந்தாலும், மாலிமாவுக்கு சுமார் 178 சபைகளில் மட்டுமே ஆட்சியை அமைக்க முடிந்தது. ஏனைய பல உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றுபட்ட எதிரணியாக இணைந்து நாம் ஆட்சியை அமைத்தோம். இங்கு பிரதிநிதித்துவம் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து செயற்பட்டதன் மூலமே பல உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைப் பெற முடிந்தது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவின. எங்களது இந்த ஒன்றிணைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. நாம் ஜனாதிபதி வேட்பாளர்களை உருவாக்கப் போகிறோம் என்றும், வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு வேலை செய்கிறோம் என்றும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைத்தால், அது எங்களின் கூட்டு முயற்சியாகவே இருக்கும். தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவே எங்களது அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்களது நோக்கமாகும்.

76 ஆண்டுகால சாபம் குறித்து இவர்கள் எவ்வளவு பொய்களைப் பேசியுள்ளனர்? இங்கு உள்ள சில கட்சிகளும் அவற்றை நம்பியிருந்தன. நாட்டுக்காக எதையும் செய்யாதவர்கள் போல மற்ற அரசியல் கட்சிகளை சித்தரித்ததே மாலிமாவின் அரசியல் பிரசாரமாக இருந்தது.

இன்று நாடு பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் போராட்ட காலத்தில் இருந்ததைப் போல இப்பிரச்சினைகள் குறித்து யாரும் உரையாடுவதில்லை. இந்த அரசாங்கம் நிலக்கரி தொடர்பான மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதுபற்றி மக்கள் மேலும் விழிப்புணர்வு பெற வேண்டும். 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விதம் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் தொடர்பிலும் மக்கள் உண்மைகளை அறிந்திருக்க வேண்டும்.

தற்போது மாகாண சபைகள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையிலும், நீதிமன்றங்களைப் பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்கும் வகையிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

ஒன்றுபட்ட எதிரணியாக நாம் அனைவரும் இணைந்து இவ்வாறான அனைத்து விடயங்களையும் மக்களிடம் எடுத்துரைக்கிறோம். மின்கட்டண உயர்வு, நிலக்கரி மோசடி போன்ற விடயங்களைப் பற்றி பேசும்போது, அதனை 2009ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அவ்வாறு என்றால் 1948ஆம் ஆண்டிலிருந்தே விசாரிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம்.

இவ்வாறான பல்வேறு தலைப்புகளை முன்வைத்து மக்களைத் தவறாக வழிநடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடாகும். அதிகாரத்திற்கு வரும்முன் கூறியவற்றுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. மக்களை ஏமாற்றிய இத்தகைய காலகட்டம் நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறவில்லை” எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button