இலங்கை

தனது இறுதி மரண சாசனத்தை தயாரிக்கும் முயற்சியில் சலே!; சட்டத்தரணியைச் சந்திக்கிறார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானியான சுரேஷ் சலே, தனது இறுதி மரண சாசனம் (உயில்) மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக தனது சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான அவகாசத்தை கோரியுள்ளார்.

சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி அசித் சிறிவர்தனவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டத்தரணி அசித் சிறிவர்தனவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்திற்கொண்டு அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும் என்றும், இதற்காக அவரை தகமை வாய்ந்த சுயாதீன வைத்திய நிபுணர்களால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக பொருத்தமான வைத்தியசாலைக்கு அவரை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது இறுதி மரண சாசனம் (உயில்) மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, அவர் தனது சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான அவகாசத்தை வழங்குமாறும் கோரியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் இந்த கூற்றுகளும் நிலைமைகளும், அவரது உடல் மற்றும் மனநிலை கடுமையாக சீர்குலைந்துள்ளதை தெளிவாகக் காட்டுகின்றன என்றும், தனது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து பகுத்தறிவான தீர்மானங்களை எடுக்கும் திறன் மற்றும் நம்பிக்கை அவருக்கு இனிமேலும் இல்லை எனவும் சட்டத்தரணி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, சில முக்கிய விடயங்களின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ள சட்டத்தரணி, இவ்விடயங்கள் குறித்து பரிசீலித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய நீதிமன்ற, குற்றவியல், அரசியலமைப்பு அல்லது சர்வதேச சட்ட நடவடிக்கைகளில் ஒரு அடிப்படையாக இக்கடிதம் பயன்படுத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button