உலகம்

ஹோர்முஸ் முடக்கத்தின் உண்மையான லாபதாரி அமெரிக்காவே ; ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களே அதிகளவில் லாபமடைந்து வருவதாக ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்டின் தலைமைச் செயல் அதிகாரி இகோர் செச்சின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்ய பொருளாதார மாநாட்டில் சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை உலக எரிசக்தி சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஹோர்முஸ் முடக்கத்தின் உண்மையான லாபதாரி அமெரிக்காவே ; ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு | The Real Beneficiary Hormuz Blockade Is America

இந்த நிலைமையால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது சந்தையில் போட்டி குறைந்துள்ளதாகவும், அதிக விலைக்கு எண்ணெயை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலகளாவிய எரிசக்தி சந்தையின் விதிமுறைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் தந்திரமான முயற்சியாகவே தோன்றுவதாகவும் இகோர் செச்சின் விமர்சித்தார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீத பங்கைக் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் பதற்ற நிலை தொடருமானால், அது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான நீண்டகால தேவையை பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

அத்துடன், இந்த நெருக்கடி மாற்று எரிபொருட்கள் தொடர்பான ஆர்வத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அந்த நாட்டை மட்டுமல்லாது, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் எரிசக்தி சந்தைக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இதனால் உருவாகும் அபாயங்கள் போதுமான அளவில் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button