காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரியும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியும் சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு அருகில் ஆரம்பமானது.
இந்த ஆர்ப்பாட்டம் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியை அடைந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை அடைந்து அங்கிருந்து யாழ்.தந்தை செல்வாவின் கலையரங்கத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்ததா? எனும் தலைப்பிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமாரின் தந்தையார் வீரராஜ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கை மற்றும் யாழ்.மாவட்டத்தின் சிவில், சமூகச் செயற்பாட்டாளர்கள் என 250 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்!, செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டும்!, அனைவருக்கும் சம உரிமை வேண்டும்!, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வை வழங்கு! உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியதுடன் பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
![]()