இலங்கை

மாத இறுதி வந்தாலே மக்கள் நடுக்கத்தில்! தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றது அரசு – ரோஹித எம்.பி. குற்றச்சாட்டு

அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் காரணம் காட்டித் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டு மக்கள் தற்போது ஒவ்வொரு மாத இறுதி நாள்களையும் அச்சத்துடன் தான் எதிர்கொள்கின்றார்கள். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைக் காரணம்காட்டி, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு அரசு தேவையில்லை என்றும், புறக்கோட்டை மொத்த விற்பனை வியாபாரிகளாலேயே விலையை அதிகரிக்க முடியும் என்றும், தமக்கு அரசு தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த கால அரசுகள் வெளியகக் காரணிகளால் நெருக்கடிக்குள்ளான போது, ஜே.வி.பியினர் அவ்வாறு செய்யலாம், இவ்வாறு செய்யலாம் என்று பாடம் கற்பித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் சர்வதேச நாணய நிதியம் கற்பிக்கும் பாடத்துக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் கடனாளியாக்கப்படுகின்றார்கள். நாணய நிதியத்தின் கட்டளைக்கு அமைவாகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதனால் அரசின் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

அரசின் மீதான மக்களின் இந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். ஆனால், அவரது கருத்துக்கு முரணாக, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலுக்கு நிதி நெருக்கடி ஏதுமில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

எனவே, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இவர்களில் யார் குறிப்பிடுவது உண்மை என்பதை அரசு நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ரில்வின் சில்வா குறிப்பிடுவதுதான் உண்மை.

இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. அவ்வாறு நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் குறிப்பிட்டுக் கொண்டு அரசு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button