5 மாதங்களில் 6 தடவை எரிபொருள் விலை உயர்வு; 2022 நெருக்கடி காலத்தை விடவும் பெருமளவான அதிகரிப்பு என்கிறது முன்னிலை சோஷலிசக் கட்சி

கடந்த 5 மாத காலப்பகுதியில் 6 தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இந்தக் காலப்பகுதியில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 140 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது என்றும், இது 2022 பொருளாதார நெருக்கடி காலத்தை விடவும் அதிகமான விலை அதிகரிப்பு எனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.
முன்னிலை சோஷலிச கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளரான புபுது ஜயகொடவே இவ்வாறு கூறியுள்ளர்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 தடவைகள் அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஜனவரி 6ஆம் திகதி, மார்ச் முதலாம் திகதி, மார்ச் 10ஆம் திகதி, மார்ச் 22ஆம் திகதி, மே 2ஆம் திகதி மற்றும் மே 30ஆம் திகதி இவ்வாறு எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஜனவரி முதலாம் திகதி இருந்த விலையை விடவும் ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 140 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 60 ரூபாவினாலும், டீசல் 130 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 160 ரூபாவினாலும் மற்றும் மண்ணெண்ணெய் 105 ரூபாவினாலும் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் பொய்யான தகவல்களை கூறுகின்றன. அண்மையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு 100 மணித்தியாலங்களில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொய்களையே கூறுகின்றது. அத்துடன் ஜுலை இறுதி வரையில் எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த விடயத்திலும் சந்தேகங்கள் எழுகின்றன.
உண்மையில் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டை விடவும் உலக சந்தையில் விலை குறைவாகவே இருக்கின்றது. ஆனால் எவ்வாறு எரிபொருள் கொள்வனவு செலவு அதிகரிக்கின்றது. அப்படியென்றால் தரமற்ற நிலக்கரி விடயத்தால் மின் உற்பத்திக்காக எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றதா என்றும், அதற்கான செலவை ஈடு செய்ய இவ்வாறு விலை அதிகரிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அல்லது டொலர் வீணாக வெளியில் அனுப்பப்பட்டுள்ளதா, அல்லது தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தை சம்பாதிக்க இவ்வாறு விலை அதிகரிக்கப்படுகின்றது? என்ற கேள்விகள் எழுகின்றன. 2022 நெருக்கடி காலத்தை விடவும் அதிகமான விலை உயர்வாக அமையும். அப்போது இருந்த டொலர் பெறுமதியை விடவும் 30 ரூபா குறைவாகவே உள்ளது. அத்துடன் 16 வீதம் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவாகவும் உள்ளது. இவ்வாறான நிலைமையில் எவ்வாறு எரிபொருள் விலைகள் அதிகரிக்கின்றது என்ற சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.
![]()