இலங்கை

பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டி புலிகளை நினைவு கூர்வதை உடனடியாகத் தடுக்கவும்;  ஆளும் தரப்பும், எதிர்க்கட்சியினரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, விடுதலைப் புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை பிரிகேடியர் என குறிப்பிட்டு அவரை நினைவு கூர்ந்ததை அனுமதிக்க முடியாது என்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் சபாநாயகருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டாரவினால் சபாநாயகருக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் 2026/05/21 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், உயிரிழந்த பிரிவினைவாத பயங்கரவாதத் தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நீங்கள் இடமளித்துள்ளீர்கள். அது தொடர்பில் ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அல்லது எதிர்க்கட்சித் தலைவர் அல்லது வேறு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாமை மற்றும் அந்த உரையை, ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குமாறு கோராமை ஆகியன மிகவும் மோசமானதொரு முன்மாதிரியாகும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

குறித்த உரை மூலம், அந்த பாராளுமன்ற உறுப்பினரால் ‘பிரிகேடியர் பால்ராஜ்’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட, பல கொடூரமான கொலைகளுக்குப் பொறுப்பான பிரிவினைவாத பயங்கரவாதி ஒருவர், ஈழ விடுதலைப் போராட்டத்தின் வீரன் என நினைவு கூரப்பட்டு கௌரவமளிக்கப்பட்டுள்ளதுஃ

அவரது அந்த உரை மூலம் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் மட்டுமன்றி, பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வழங்கிய சத்தியப்பிரமாணமும் மீறப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும். அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்பின் பயங்கரவாதத் தலைவர் ஒருவருக்கு, குறிப்பாக நாட்டைப் பிரிப்பதற்காக அல்லது ஈழ அரசை உருவாக்குவதற்காகக் கொடூரமான பயங்கரவாதச் செயல்களைச் செய்த ஒருவருக்கு பாராளுமன்றத்திற்குள் உரையொன்றின் மூலம் கௌரவமளிப்பதற்கு இடமளிப்பதன் ஊடாக, எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் மேலும் தொடர்வதற்கும் பொதுமக்களின் மனதில் தவறானதொரு பிம்பம் உருவாக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

பாராளுமன்ற மரபுகள், நிலையியற் கட்டளைகள் மட்டுமன்றி, நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு முரணான ஒரு செயலுக்கு பாராளுமன்றத்திற்குள் இடமளித்ததன் மூலம் நீங்கள் உங்களது பாரதூரமான பொறுப்பை அலட்சியப்படுத்தியுள்ளீர்கள் என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, அந்தத் தவறைத் திருத்துவதற்காக, குறித்த உரையை உடனடியாக ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்குமாறும், இவ்வாறான செயல்கள் இனிமேல் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வெளியிடுமாறும் உங்களிடம் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button