இலங்கை

4 வருடத்தில் தேரர்கள் மூலம் 488 சிறுவர்கள் பாதிப்பு; புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர்

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகவும் வேதனையானதும், வழியானதுமாக நாங்கள் கருதுகிறோம்.

அனுராதபுரத்தில் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இலங்கையில் இருக்கும் அத்தனை ஆண், பெண்களுடைய கடமையுமாகும்.இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட சாரார் தான் நாங்கள் இதில் பங்கேற்க வேண்டிய ஒரு துரதிர்ஷ்ட நிலை இருக்கிறது.

போராட்டத்தில் முழுமையாக பங்கு பெறும்போது தான் எங்களுக்கான மாற்றத்தையும், வெற்றியையும் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற இந்த வல்லுறவு, அதாவது பௌத்த பிக்கு ஒருத்தரால் நடத்தப்பட்ட இந்த வல்லுறவானது, உடனடியாக அவருக்குத் தண்டனை வழங்க வேண்டிய ஒரு செயல்பாடாகும்.

இருந்தபோதிலும், அவருக்கான தண்டனையில் இருந்து அவருக்கு பிணை கிடைத்தது மிகவும் மனவேதனையும், வருத்தமாக உள்ளது.

அதே நேரத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் 2018-ல் இருந்து 2022 வரைக்கும் 488 சிறுவர்கள், தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட அல்லது பாலியல் ரீதியான சேட்டைகளுக்கு உட்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஏழை சிறுவர்கள் தானே இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.அதனால் அந்த வழக்குகள் பதியாமல் இருக்கலாம்.

இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், இவ்வாறான ஆட்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு பேசப் போகிறார்கள், அவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா? அவர்களுக்கு பெண்கள் இல்லையா? இந்த வேதனை, வலி அவர்களுக்கு வராதா?

இந்த மன்னாராக இருந்தாலும் சரி, புத்தளமாக இருந்தாலும் சரி, இலங்கையில் எந்த நீதிமன்றத்திலும் இவ்வாறான வல்லுறவு அல்லது பாலியல் கொடுமை ஏற்படும் போது, சட்டத்தரணிகள் நிச்சயமாக சமூகமளிக்க கூடாது என்பதையும், வாதிட கூடாது என்பதையும் இந்த தருணத்தில் மிகவும் வேதனையோடு, வலியோடும் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button