உலகம்

உக்ரைனில் போர் பதற்றம் தீவிரம் ; ரஷ்ய தாக்குதல் குறித்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்த ரஷ்யா தீவிரமாகத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி எச்சரித்தாா்.

உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அவா், தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது திட்டமிட்ட தொடா் தாக்குதல்களை நடத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் மாணவா் விடுதியில் 21 போ் உயிரிழந்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக பெரும் தாக்குதலை ரஷ்யா மீண்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி, கீவ் நகரில் உள்ள வெளிநாட்டவா்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற ரஷ்ய தரப்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், லுஹான்ஸ்க் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என உக்ரைன் மறுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய தாக்குதல்களை முறியடிக்க, கூடுதல் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினாா்.

மேலும், ரஷ்யா மீது சா்வதேச நாடுகள் உடனடியாகக் கூடுதல் தடைகளை விதிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா்.அதேநேரம், ரஷ்யாவுக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் அந்நாட்டின் எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதலைத் தொடா்ந்து வருகிறது.

ரஷ்யாவின் ரோஸ்டோவ், கிராஸ்னோடா் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது உக்ரைன் சனிக்கிழமையும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, ‘நேட்டோ’ உறுப்பு நாடான ருமேனியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது மோதி வெடித்தது ரஷ்ய ட்ரோன் தான் என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

ட்ரோனின் உடைந்த பாகங்கள் மற்றும் ஆதாரங்களை ருமேனியா வழங்கினால், ரஷ்யா விசாரிக்கும் என்றும், அது உக்ரைனின் ட்ரோனாகக் கூட இருக்கலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button