உலகம்

ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விச் சுதந்திரம் தொடர்ந்தும் முடக்கத்தில்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BBC வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் பதின்ம வயதை எட்டியவுடன் அவர்கள் வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும் நிலை தொடர்கின்றது.

தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தக் கல்வித் தடையால், அங்குள்ள இளம் பெண்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி கற்க முடியாத சூழ்நிலையால், பல குடும்பங்கள் தங்களது இளம் பெண்களை கட்டாயத் திருமணங்களுக்கு உட்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தடை அமுல்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில், ஆப்கான் பெண்கள் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எனினும், தலிபான் பாதுகாப்புப் படைகள் அந்தப் போராட்டங்களை வன்முறையால் ஒடுக்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போதைய சூழலில் தலிபான் அரசுக்கு எதிராக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கான கல்வித் தடை குறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்தல்லா ஃபித்ரத்தி கருத்து தெரிவிக்கையில், தற்போது சுமார் 70 இலட்சம் சிறுவர்களும் 50 இலட்சம் சிறுமிகளும் கல்வி கற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், 6ஆம் வகுப்பிற்கு பிந்தைய பெண்கள் கல்வி மீதான கட்டுப்பாடு தொடர்பான தீர்மானம் கல்வி அமைச்சின் கீழ் உள்ள விவகாரம் எனவும், எதிர்காலத்தில் இதற்கான தீர்வு குறித்து திருப்திகரமான பதில் வழங்கப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதில் தலிபான் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button