இலங்கை

ரூபாவை மீட்டெடுக்க அரசினால் 500 மில்லியன் டொலர் செலவு!; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

500 மில்லியன் டொலர்களை செலவிட்டு அரசாங்கம் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்தியதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கி உரிய நேரத்தில் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்தாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எனவும் பின்னர் செலாவணி கையிருப்பில் இருந்து 500 மில்லியன் டொலர் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்தியதாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளைப் போன்றே மத்திய வங்கி ஆளுநரும் பெருமிதம் பேசுவதை நாம் அவதானித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்துவதற்கு மத்திய வங்கி தாமதமாக செயல்பட்டதன் காரணமாக தற்பொழுது ஏற்பட்டுள்ள ரூபாவின் ஸ்திரத்தன்மை தற்காலிகமாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பண வீக்கம், செலாவணி மாற்றம் மற்றும் வட்டி வீதம் என்பனவற்றை ஸ்திரப்பப்படுத்தும் பொறுப்பு மத்திய வங்கியினுடையது என தெரிவித்துள்ளார்.

நூல் அறுந்த பட்டம் போல் ரூபாவை மிதக்க விடச் செய்து மத்திய வங்கி வேடிக்கை பார்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய வங்கி ஆரம்ப கட்டத்திலேயே ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் 500 மில்லியன் டொலர் பெறுமதியான பணத்தை சந்தைக்கு வெளியிட்டு, எமது டொலர் கையிருப்பினை குறைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி காலதாமதமாக செயல்பட்டதனால் எமது டொலர் கையிருப்பு குறைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையும் சவால்களை சந்தித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button