வட, கிழக்கைப் பாலைவனமாக மாற்றக்கூடிய அரசாகங்கமே இது; பூநகரிப் போராட்டத்தில் வேலன் சுவாமிகள்

வடக்கு, கிழக்கைப் பாலைவனமாக மாற்றக்கூடிய ஒரு அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜே.வி.பி.என்ற முகத்தைக் கொண்டு தமிழ் இனத்தை அழிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவதாகவும் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் காற்றாலை,கனிம மணல் மற்றும் சுண்ணக்கல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுடைய பூர்வீகக் கிராமங்களின் இருப்பை ஒழிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசு முன்னெடுக்கும் காற்றாலை, கனிம மணல் அகழ்வு மற்றும் சுண்ணக்கல் அகழ்வு ஆகிய திட்டங்களை முற்றாக அதேநேரம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருக்கிறார்கள்.
மக்களுக்கான அபிவிருத்தி என்பது மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வரும் மண்ணிலேயே அவர்களுடைய சந்தோஷத்தையும்- நலனையும் பேணி, அனைத்து வளங்களையும் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வியலை வாழக்கூடிய வகையில் செய்யப்படும் அபிவிருத்திகளே மக்களுக்கான அபிவிருத்தியாகும்.
மக்களுக்கான வாழ்வாதாரங்களை அழித்து, மக்களின் குடிகளையும் அதேநேரம் இருப்பையும் அழிக்கும் திட்டங்கள் ஒருபோதும் மக்களுக்கான அபிவிருத்திகள் அல்ல. அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், பண்பாடு, பாரம்பரியத்தையும் அதேநேரம் பூர்வீக நிலங்களை அழிக்கும் முயற்சியே இந்த அபிவிருத்தி.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம். காலாகாலமாக தமிழர்கள் வாழ்ந்த பூமி இது. சிங்கள இனம் இந்த மண்ணில் வரும் முன்பே தமிழர்கள் வாழ்ந்தார்கள். நாம் இந்த வரலாற்றைச் சொன்னால் இனவாதம் என்கின்றார்கள். ஆனால் இது இனவாதம் இல்லை. உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எமது இளைய சமுதாயம் இந்த உண்மையை அறிந்திருக்க வேண்டும்.
காலாகாலமாக நாம் வாழ்ந்து வந்த பூமி, நாம் வாழ்ந்த மண் மிக மிக முக்கியமானது. நாம் பிறந்த வீடு, நாம் பிறந்த மண் என்ற உணர்வு தாயிலும் மேலான ஒரு உணர்வு. அந்த உணர்வு மனிதப் பிறப்பின் போதே ஆரம்பிக்கின்றது. அப்படியான உணர்வைப் புறந்தள்ளி, எமது கிராமத்தின் வளங்களை அழித்து எம்மை வேறு கிராமங்களில் குடியேறச் சொல்லுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் வேண்டுமானால் தமிழர் தாயகத்துக்கு வெளியே என்ன வேண்டுமானாலும் அபிவிருத்தியைச் செய்து கொள்ளுங்கள்,அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. எமது தாயகம் மற்றும் எமது தாயகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அற்புதமானவை. பூகோள அரசியலில் கனிம மணல் மிக மிக பெறுமதியானது. தெற்கில் இல்லாத கனிம மணல் எமது தாயகத்தில் உள்ளது. இயற்கை துறைமுகம் திருகோணமலையில் உள்ளது, அதேபோல் எண்ணெய் வளம் மன்னாரில் உள்ளது.
இந்த அரசாங்கம் இப்படியான எமது வளங்களைப் பல்தேசியக் கம்பெனிகளிடம் வழங்குகின்றார்கள். இது எமது பொருளாதாரத்தை அப்படியே அழிக்கும் செயற்பாடாகக் காணப்படுகின்றது.
சுண்ணாம்புக்கல் அகழ்வு என்பது மிக மிக ஆபத்தான ஒன்று. எமது வளங்களைச் சுரண்டி அரசு பொருளாதாரத்தை ஈட்ட முயற்சிக்கின்றது, இதனால் எமக்கு எந்தவிதமான பிரயோஜனமும் கிடைக்கப் போவதில்லை. சிறிய சிறிய ஆசைகளைக் காட்டி மோசடி செய்யப் பார்ப்பார்கள், மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. அநுர அரசாங்கமும் காலத்துக்குக் காலம் வரும் சிங்களப் பேரினவாத அரசுதான். தேசிய மக்கள் சக்தியானது ஜேவிபி முகத்தைக் கொண்டு எம் இனத்தை அழிக்கக்கூடிய ஒரு அரசாகக் காணப்படுகின்றது. அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தை வழக்குப் போட்டுப் பிரித்தார்கள். 2004ஆம் ஆண்டு சுனாமியால் தமிழ் மக்கள் துன்பப்படும் போது, சர்வதேச உதவிகள் கிடைத்த போது பொருளாதாரக் கட்டமைப்பு என்ற ரீதியில் அந்த உதவியைத் தமிழர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுத்தார்கள். 2004ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் மடியக் காரணமாக, 40,000 சிங்கள இளைஞர்களை இறுதி யுத்தத்தில் இணைத்தார்கள். எனவே இந்த அரசு தமிழர்களின் வளங்களைச் சூறையாடி வடக்கு, கிழக்கைப் பாலைவனமாக மாற்றக்கூடிய ஒரு அரசாகவே காணப்படுகின்றது.என மேலும் அவர் எச்சரித்திருந்தார்.
![]()