காற்றில் ஆடும் கால்பந்து ஜாம்பவான்

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியைக் கௌரவிக்கும் வகையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட 70 அடி உயர பிரம்மாண்ட சிலை, தற்போது பலத்த காற்றில் ஆடுவதால் அதனைப் பாதுகாப்பாக அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி அணியின் 38 வயதான நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை ஏந்தியவாறு, 21 மீற்றர் (70 அடி) உயரத்தில் தங்க நிறத்தில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் மெஸ்ஸியின் ‘கோட்’ (GOAT Tour) இந்தியப் பயணத்தின் போது இது கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பரபரப்பான பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள இந்தச் சிலை தற்போது பலத்த காற்றில் அசைந்தாடுவதால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சிலை எப்போது முழுமையாக அகற்றப்படும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், அது வீதியில் விழுந்து விபத்து ஏற்படுவதைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) அவசர அவசரமாகச் சிலையின் மீது ஏறிய தொழிலாளர்கள், அதன் தோள் பகுதிகளில் தடிமனான கயிறுகளைப் பிணைத்து, தற்காலிகமாகக் கட்டிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்தச் சிலை அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் மீண்டும் நிறுவப்படுமா என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அர்ஜென்டினா அணி ஜூன் 16ஆம் திகதி கான்சாஸ் நகரில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியுடன் தனது உலகக் கோப்பைத் தொடரை ஆரம்பிக்கவுள்ளது. மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதிலும், அவர் தனது 6ஆவது உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, கிரிக்கெட்டில் வல்லரசாகத் திகழ்ந்தாலும், கால்பந்தில் பின்தங்கியே (பீபா தரவரிசையில் 142ஆவது இடம்) உள்ளது. இருப்பினும், அண்மைய ஆய்வுகளின்படி இந்தியாவில் இரண்டாவது மிகவும் விரும்பப்படும் விளையாட்டாகக் கால்பந்து உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()