இலங்கை

ஒருங்கிணைந்த அரசியலை கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை-அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்!

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என அரசியல் ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி. ஆ. ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டிறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு.

கட்சிக்குள்ளேயும், வெளியே நிற்கும் கட்சிகளோடும் தொடர்ச்சியாக சண்டை பிடிபடுவதே தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவின் விதியாகிவிட்டது போலத் தெரிகின்றது.

அண்மையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கேயே உட் கட்சி சண்டை அடிதடி சண்டையை நோக்கி வளர்ந்தது எனக் கூறப்படுகின்றது. இது வலைத்தளங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது. அக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றுவதற்காகவே கூட்டப்பட்டது. காலை 10:30 க்கு தொடங்கி கூட்டம் பகல் 2:30 வரை சிறீதரன் மீதான குற்றச்சாட்டினை சுமந்திரனும், சாணக்கியனும், சயந்தனும் முன் வைத்தனர்.

 

குற்றச்சாட்டு வழமையாக அரசியலமைப்புப் பேரவையில் இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டுத் தான். முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சரான குருகுலராஜா இக் குற்றச்சாட்டுகளை மறுதலித்து சுமந்திரனைப் பார்த்து நீங்கள் பொய் சொல்கின்றீர்கள் எனக் கூறினார்.

 

 

சுமந்திரன் உடனடியாகவே 3 அடி முன்னால் பாய்ந்து குருகுலராஜவை அடிக்க வெளிக்கிட்டார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநாத் ஓடிச் சென்று கை ஓங்கிக் கொண்டு சென்ற சுமந்திரனை தடுத்து நிறுத்தினார். கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரத்தினவேல் சுமந்திரனின் முதுகைத் தடவி சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்தினார்.

 

உடனடியாகவே சிறீதரன் சிங்கம் போல சீறி எழுந்தார். “ஏலுமெண்ட அடியடா பாப்போம் மடையா?” எங்களை மடையனாக்கப் பாக்கறியா? பேயா என்று வன்னித் தமிழில் கத்தினார். இதற்குப் பிறகு சுமந்திரன் அமைதியானார்.

 

முன்னர் ஒரு தடவை முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் சுமந்திரன் அடிக்க எழும்பினார். சாள்ஸ் நிர்மலநாதனும் உடனே “அடிபடவருவதென்றால்; வா நான் 10 வயதில் சைக்கிள் செயினால் அடித்தவன் முடியுமென்றால் வா” என்றார். சுமந்திரன் அடங்கிப் போனார்.

சுமந்திரனிடம் முரண்படுவோர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஜனநாயகப்பலம் இல்லைப் போலவே தெரிகின்றது.

 

ஒற்றை அதிகாரத்தை அவர் விரும்புகின்றார். ஒரு உறைக்குள் இரண்டு வாள்களை வைத்திருப்பதற்கு அவர் தயாரில்லை. தலையாட்டிகள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றாரே தவிர கேள்வி கேட்பவர்களை அவருக்கு பிடிக்காது.

 

தலையாட்டிகளோடு மட்டும் வாழ்ந்து பழகியபடியால் மற்றவர்கள் கேள்வி கேட்டதும் சட்டென அவருக்கு கோபம் வந்து விடுகின்றது.

உடனடியாக அடிதடிக்கு முயல்கின்றார்.

 

கொழும்புக்காரர்களை விட கிராமத்துக்காரர்கள் நன்றாக அடிபடுவார்கள் என்பது அவருக்கு புரிவதில்லை. கலந்துரையாடி ஜனநாயக முறைப்படி தீர்மானம் எடுக்கும் ஆற்றல் துளியளவு கூட அவரிடம் இல்லை.

 

கட்சியில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அது தான் காரணம். தன்னை எதிர்ப்பவர்களை சதித்திட்டம் தீட்டி வெளியேற்றுவதிலே கவனம் செலுத்துவார்.

 

அவருடைய சதித்திட்டத்திற்கு பலியானவர்களில் அனந்தி சசீதரன், சிவகரன், தவராஜா, சரவணபவன் எனப் பட்டியல் அதிகம்.

 

 

தமிழரசுக் கட்சின் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க பலர் முயற்சி செய்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை. இறுதியாக வடக்கு கிழக்கு ஆயர் மன்றமும் அதற்கு முயற்சிப்பதாக செய்திகள் வந்தன. பயன் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

 

சிறீதரனைத் தலைவராகவும், சுமந்திரனை செயலாளராகவும் மாற்றி பிரச்சனைகளை எப்போதோ சுமூகமாக தீர்த்திருக்கலாம். அல்லது கூட்டுத் தலைமையை உருவாக்கியிருக்கலாம்.

 

அதற்கு சுமந்திரன் உடன்படவில்லை. முன்னர் கூறியது போல சுமந்திரன் ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை.

 

தற்போது சுமந்திரன் சிறீதரனின் செல்வாக்கினை பலமிழக்கச் செய்வதற்காக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அதில் முதலாவது கட்சியின் கட்டுப்பாடு முழுவதையும் தன் கையில் எடுத்துக் கொண்டு கட்சிக் கட்டமைப்புகள் ஊடாக சிறீதரனை அகற்ற முயற்சிப்பதாகும்.

 

வவுனியா மத்திய குழுக் கூட்டம் அதற்காகவே கூட்டப்பட்டது.

 

இரண்டாவது நகர்வு சிறீதரனின் செல்வாக்குப் பிரதேசமாக கிளிநொச்சி இருப்பதனால் சிறு சிறு கூட்டங்களை அங்கே நடாத்தி தன்னுடைய செல்வாக்கினை அங்கு வளர்ப்பதற்கும் முயற்சி செய்து வந்தார்.

 

முன்னாள் போராளிகளையும் அதற்கு பயன்படுத்தினார் ஆனாலும் அந்த முயற்சி பெரியளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. கிளிநொச்சி சிறீதரன் வாழ்ந்த இடம். கிளிநொச்சியின் ஒவ்வொரு குச்சொழுங்கையும் சிறீதரனுக்கு அத்துபடி. மக்களோடு மக்களாகவே வாழ்ந்தவர். மக்களின் மரண வீடு, திருமண வீடுகளிலில் அசல் கிளிநொச்சியானாகவே அவர் கலந்து கொள்வார். அசல் வயல்காட்டானாக வாழ்ந்தவர் எனலாம். சுமந்திரன் பிரிவில் இருக்கும் மூத்தவர்கள் சிறீதரனுக்கு “காட்டான்” என்றே பட்டம் சூட்டியதுண்டு.

 

ஒரு தடவை சிறீதரன் இக் கட்டுரையாளரிடம் பேசும் போது “கட்சியின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. நான் பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவனல்ல. பணக்காரனுமல்ல. முடிந்தவரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு என்னால் செய்யக் கூடியதைச் செய்வேன் இல்லையேல் கிளிநொச்சியில் 50 வாழையை நட்டு விட்டு கிளிநொச்சியில் வாழ்வேன்” என்றார்.

 

இவ்வாறு அசல் கிளிநொச்சியானாக வாழ்ந்து வரும் சிறீதரனை கொழும்பிலிருந்து வந்தவர் கிளிநொச்சியில் வீழ்த்துவது கடினம். கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்றதல்ல. அப் பிரதேசம் சந்திக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளும் வேறானவை. ஆனந்த சங்கரிக்கு பிறகு கிளிநொச்சி மக்களின் அசையாத ஆதரவினை பெற்றவர் சிறீதரன் தான். ஆனந்தசங்கரிக்கும் கிளிநொச்சிக் காரர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு கிளிநொச்சிக் காரனாக நடக்கும் ஆற்றல் இருந்தது.

 

வயல் வரம்பில் வெற்றிலையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மக்களோடு உரையாடும் ஆற்றல் இருந்தது. ஆனாலும் சிறீதரன் வாழ்ந்து அனுபவித்தவர். ஆந்த ஆற்றல் அவருக்கு கிடையாது. இந்த வகையில் ஆனந்தசங்கரியின் ஆற்றல் சற்றுக் குறைவு தான்.

 

மூன்றாவது நகர்வு சிறீதரனுக்கு எதிராக சந்திரகுமாரை வளர்த்து விடுவதாகும். இதற்காக சுமந்திரன் பலகாலமாகவே முயற்சிகளைச் செய்து வந்தார். அண்மைக் காலத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடான உறவைப் பயன்படுத்தி அதற்கான முயற்சிகளைச் செய்தார். ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியும் அங்கம் வகிக்கின்றது. சந்திரகுமாருக்கென ஒரு வாக்குப் பலம் கிளிநொச்சியில் உண்டு. குறிப்பாக அங்கு வாழும் மலையக வம்சாவளி மக்களிடமும் உண்டு.

 

சந்திரகுமாரும் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்தவர் தான். இயக்கச்சியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. ஒருவகையில் சிறீதரன், சந்திரகுமார் போட்டி என்பதும் இரண்டு கிளிநொச்சியான்களுக்கு இடையிலான போட்டிதான். இந்த முயற்சியிலும் சுமந்திரனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

 

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கும் ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டமையே இதற்கு காரணம். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்க நாம் தயார். ஆனால் பொதுச் சின்னம், பொதுக் கூட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

 

இது உருவாக்கப்படாவிட்டால் நாம் தனித்து இயங்குகின்றோம் எனக் கூறி விட்டனர். சுமந்திரன் மத்திய குழுவில் கூடி கதைத்து விட்டு முடிவு சொல்கிறோம் எனக் கூறினார். இதுவரை முடிவினைக் கூறவில்லை. இதனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையேயான உறவு இன்று முறிந்த நிலையிலேயே இருக்கின்றது.

 

 

தற்போது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கு விககினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடனேயே அதிக நெருக்கம் உள்ளது. விக்கினேஸ்வரன் முதுமை நிலையில் இயலாது இருப்பதனால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு தற்போது முழுமையாக மணிவண்ணனிடமே வந்துள்ளது. மணிவண்ணனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையே முரண்பாடு இருப்பதனால் அதனுடன் தமிழ் மக்கள் கூட்டணி சேர முடியாது.

 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தொடர்பாக நம்பிக்கை மணிவண்ணனுக்கு இல்லை. அதே வேளை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு சோபிக்கவும் முடியாது. எனவே மணிவண்ணனுக்கும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுடன் சேருவதைத் தவிர வேறு தெரிவு இல்லை.

 

 

முன்னர் மணிவண்ணனின் மாநகரசபை உறுப்பினர் பதவியை நீதிமன்றத்தின் மூலம் பறித்தவரும் சுமந்திரன் தான். பின்னர் மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்டதைத் தொடர்ந்து மணிவண்ணனை மேயராக்கியதிலும் சுமந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நலன்களே உண்டு என்ற கருணாநிதியின் புகழ்பெற்ற பொன்மொழியை இது வெளிக்காட்டியது.

 

 

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கு கட்சிக்குள்ளேயும் ஒருங்கிணைவு அரசியலைக் கட்டியெழுப்பத் தெரியவில்லை.

கட்சிக்கு வெளியே ஏனைய கட்சிகளோடும் ஒருங்கிணைந்த அரசியலை கட்டியெழுப்பத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் அதி உயர் அதிகாரம் தனக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும்

இன்று கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைவு அரசியல் என்பது மிகவும் அவசியமானது.

 

இந்த ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் தமிழ் மக்கள் தற்போது சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது. அரசியல் தீர்வு பொறுப்புக் கூறல், ஆக்கிரமிப்பு, தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் மேல்நிலை, நிலப்பறிப்பு, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை போன்ற நிலை மாறுகால நீதிப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்சினைகள் என ஏராளம் உண்டு.

 

இவை எல்லாவற்றிற்கும் முகம் கொடுப்பதற்கு ஒருங்கிணைந்த அரசியல் தேவை. தனித் தனிக் கட்சிகளின் முயற்சிகள் மூலமோ, சிவில் சமூகத்தின் முயற்சிகள் மூலமோ இவற்றிற்கு முகம் கொடுக்க முடியாது.

 

இந்த ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக இருக்கின்றார்.

இறுதியான முயற்சி தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்தினை முன் வைப்பதே இதன் நோக்கம். இந்த முயற்சியில் தமிழ்த் தேசியப் பேரவைக்கு சமபங்காளர் அந்தஸ்து கொடுக்காததினால் அது உரையாடலுக்கு வெளியில் நிற்கின்றது. தமிழத் தேசியப் பேரவையாக இணைந்து கொள்வோம் என்ற கோரிக்கை சுமந்திரனால் நிராகரிக்கப்பட்டதே இதற்கு காரணம். நிபுணர் குழு விடயத்திலும் தமிழ்த் தேசியப் பேரவையின் சிபார்சுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுமந்திரனின் சிபார்சுகள் தொடர்பாக எமது தலைமையுடன் கலந்தாலோசித்து விட்டுத் தான் முடிவு சொல்வோம் என தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் கூறிய நிலையிலும் அதன் சம்மதம் இல்லாமலே நிபுணர் குழுவின் பெயர்கள் வெளியிடப்பட்டன. உரையாடலை தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வழி நடத்துவதற்கு பதிலாக சுமந்திரனே வழிநடாத்துகின்ற நிலை காணப்படுகின்றது. மொத்தத்தில் நிகழ்ச்சி நிரலை சுமந்திரனே தீர்மானிக்கின்றார். தற்போது மீண்டும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை சமரச முயற்சிக்கு கஜேந்திரகுமாரை அழைத்துள்ளது. இதில் சமரசம் ஏற்படும் என உறுதியாகக் கூறி விட முடியாது. ஒருங்கிணைவு அரசியலுக்கு கொள்கை உறுதிப்பாடு, சம பங்காளர் அந்தஸ்து, அமைப்பு பொறிமுறை என்பன மிகவும் முக்கியமானது. தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இவ்விடயங்களில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகள் வீண் போகக்கூடாது என்பதே அனைவரினதும் வேண்டுதலாகும். தமிழ்த் தேசியப் பேரவையும், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பது வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ் தேசியச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நண்பர் ஒருவர் தமிழ்க் கட்சிகள் தமிழ் அரசியலை பூச்சிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன எனக் குறிப்பிட்டார். இது சுமந்திரனதோ, கஜேந்திரகுமாரினதோ, சித்தார்த்தனதோ சொந்தப் பிரச்சனையல்ல. தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனை. சிவில் சமூகம் உடனடியாகத் தலையிட்டு இதனை சீர் செய்ய வேண்டும் இல்லையேல் தமிழ் அரசியல் பாதாளத்திற்கு செல்வதை ஒருவரும் தடுக்க முடியாது போகும்.

அனுரா அரசாங்கத்திடம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் யோசனை உண்டு. பிராந்திய, சர்வதேச அழுத்தங்களே இதற்கு காரணமாகும். அமைச்சர் ஒருவர் இந்த வருடத்திற்குள் நடக்கும் எனக் கூறியிருக்கின்றார். தென் பகுதியில் அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடாத்துவதற்கு அது அஞ்சுகின்றது. ஆனால் வடக்கு – கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு பெரியளவிற்கு வீழ்ச்சிடையவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்குள்ள அதிருப்தியே இதற்கு காரணமாகும். தமிழ்க் கட்சிகள் தனித்தனியே தேர்தலில் போட்டியிட்டால் தேசிய மக்கள் சக்தியே மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும். அதற்கான அடித்தள வேலைகளை தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கிராமங்கள் தோறும் பிரஜாசக்தி அமைப்புகள் முன்னணியில் நிற்கின்றன. தற்போது நடுத்தர வர்க்கத்தை நோக்கியும் தேசிய மக்கள் சக்தி நகரத் தொடங்கியுள்ளது. இப்போக்கு தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலத்திற்கு ஏற்றதல்ல.

சீர்செய் இயக்கத்தை முதலில் தமிழரசுக் கட்சியில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. தமிழரசுக் கட்சி உள்ளவற்றுக்குள் பெரிய கட்சி. வடக்கு – கிழக்கு முகமுள்ள கட்சி. இது பலவீனப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிவில் சமூகம் உடனடியாகத் தலையிட்டு இதனை சீர் செய்ய வேண்டும். தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும், வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றமும் இணைந்து இதற்கான முயற்சிகளைச் செய்வது நல்லது. முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் சந்தித்து முதலில் உரையாட வேண்டும். வெளியில் நிற்கும் சிவில் சமூகத்தின் அபிப்பிராயங்களையும் கேட்டறிய வேண்டும். இம் முரண்பாட்டுக்குள் கொள்கைப் பிரச்சனையும் நடைமுறைப் பிரச்சனையும் உள்ளது. இந்த இரு விவகாரங்களிலும் போதிய புரிதலைப்பெறும் போதே மத்தியஸ்த்தர்களினால் ஆக்க பூர்வமான பங்களிப்புகளை வழங்க முடியும். இம் முயற்சியில் சாம, பேத, தான, தண்டம் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயங்கக் கூடாது.

தமிழரசுக் கட்சியை சீர் செய்து விட்டதன் பின்பு கட்சிகளிடையே ஒருங்கிணைவைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இதில் சுமந்திரனையும் கஜேந்திரகுமாரையும் ஒருங்கிணைப்பது தான் கடினமாக இருக்கும். இதற்குள் கொள்கை நடைமுறை, ஈகோ சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. முதலில் தனித்தனியே இருதரப்பினருடனும் கதைத்த பின் அனைத்து தரப்பையும் இணைத்து வைத்து உரையாடலை மேற்கொள்ளலாம்.

இதற்குப் பின்னரும் கட்சிகள் ஒருங்கிணைவுக்கு வராவிட்டில் இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு புதிய தலைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது பற்றி யோசிப்பது நல்லது. தென்னாசியாவில் பல இடங்களிலும் புதிய தலைமையே மேல் நிலைக்கு வருகின்றது பங்களாதேசிலும் அதுதான் நடந்தது. தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது.

காலம் எங்களுக்காக காத்திருப்பதில்லை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button