இலங்கை

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி முடிவு கிடைக்கும் வரை பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலுக்கு இணக்கம்!

மாகாண சபைகள் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி முடிவு கிடைக்கும் வரை, தற்காலிகமாக அந்தத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவம், அது தாமதமாவதற்கான காரணங்கள் மற்றும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட 42 தரப்பினரில், ஒரேயொரு அரசியல் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இக்கூட்டுப் பிரகடனத்தை பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கும் ஆளுங்கட்சிக்கும் அனுப்பி வைக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி, ஶ்ரீ லங்கா மகாஜன கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் மகாசபை, மலையக அரசியல் அரங்கம், ஜனசெத பெரமுன, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது குறித்த முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்திற்கு முன்னர் நடைமுறையிலிருந்த தேர்தல் முறைமையின் கீழ், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு இணங்குவதாகவும். அத்துடன், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி முடிவு கிடைக்கும் வரை அதனை நடைமுறைப்படுத்தவும் மற்றும் தார்மீக அடிப்படையில் பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்துவத்தை 25 வீதம் ஆக உறுதிப்படுத்துவதற்கும் அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button