இலங்கை

தேர்தல் ஆணைக்குழுத் தலைவராக ரில்வின்!; நியமிக்குமாறு கூறுகிறார் தயாசிறி எம்.பி.

ஜே..வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவையே நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.

தேர்தல் பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்துக்கோ அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கோ கிடையாது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஜே.வி.பி காரியாலயத்தின் தீர்மானத்துக்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது என்பது ரில்வின் சில்வாவின் கருத்து ஊடாக வெளிப்படுகிறது.

இவரின் கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிப்போம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்காக பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் ரில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் இந்தாண்டு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் இந்தாண்டு நடைபெறாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட போது ‘ தேர்தலை நடத்த நிதி இல்லை’ என்று குறிப்பிட்டார். அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார்.பேசாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவையே நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button