இலங்கை

கபில சந்திரசேனவின் மரணம் அமெரிக்க எப்.பி.ஐ.யின் உதவியை நாடியது சி.சி.டி.

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான கைத் தொலைபேசியை திறப்பதற்கு (unlock) அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (எப்.பி.ஐ.) உதவியைக் கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (சி.சி.டி)நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தச் சாதனம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள், எப்.பி.ஐ. அமைப்பிடம் இருந்து கிடைக்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர முன்னிலையில், சந்திரசேனவின் மரணம் குறித்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக  நடைபெற்ற நீதவான் விசாரணை நடவடிக்கைகளின் போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இரண்டு சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஜூனியர் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பதற்காக சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக சி.சி.டி.அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். இருப்பினும், முன்னைய நீதிமன்றக் கடமைகள் காரணமாக தங்களால் சமூகமளிக்க முடியவில்லை என சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததுடன், எதிர்காலத் திகதியொன்றில் தங்களுக்கு அழைப்பாணை வழங்குமாறு கோரியிருந்தனர்.

ஏற்கனவே 18 சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதவான், இதற்கு முந்தைய சாட்சிகள் முறையான அழைப்பாணை இன்றி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், 19 மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு மட்டும் ஏன் அழைப்பாணை கோரப்படுகிறது என்று விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

விசாரணை அதிகாரிகள் பதிலளிக்கையில், அழைப்பாணை வழங்கப்பட்டால் சாட்சிகள் முன்னிலையாவதாகத் தெரிவித்திருந்தனர் என்று கூறினர். இருப்பினும், புலனாய்வாளர்களால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிகள் முறையான அழைப்பாணை இன்றி நீதிமன்றத்தில் முன்னிலையாவதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்துள்ளது என்று அவதானித்த நீதவான், அதே நடைமுறை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கமைய, இரு சட்டத்தரணிகளையும் சாட்சியமளிக்க கட்டாயப்படுத்தும் வகையில் அழைப்பாணை வெளியிடுமாறு சி.சி.டி.விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

வழக்கின் மேலதிக விசாரணை மே 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button